வாகனத்துக்கு காத்திருக்காமல்
ரயிலின் நேரத்துக்கு
நீ நடந்து சென்ற
மீனாட்சிபுரம் குறுக்கு தெருக்கள்
உன்னை தேடுகின்றன.
ஜவுளிக்கடை கவர்களை
காணும் போதெல்லாம்
நீ மடக்கி எடுத்துச் சென்ற
ஒற்றை வேட்டியும் சட்டையும்
நினைவில் நிழலாடுகிறது.
எப்போதாவது பேருந்தில் ஏறும் போது
நெடும்பயண களைப்போடு
கக்கத்தில் துணி கவரோடு
நிற்பதைக் கண்டு
கண்டக்டர் சீட் ஒதுக்கி தந்து
நீ அமர்ந்தது நினைவாகிறது.
வயல் கொன்று மனை அமைக்கும்
புல்டோசர்களை காணுகையில்
சோவென கொட்டும் மழையில்
புறம்போக்கு வாசிகளின் குடிகாக்க
புல்டோசர் முன் நின்று
நிறுத்து......
என கர்ச்சிக்கையில்
உன் உதட்டில் விழுந்தோடிய
நீர் துளிகள் எனக்குள் உயிர் கொள்ளும்.
ஊரிலிருந்து வந்தவரை
கட்டிலில் படுக்க வைத்து
தரையோரம் பாய் விரித்து
மெய் மறந்து தூங்கிப் பழகிய நீ..
ஒரு நாளைக்கு
ஒரு லட்சம் ரூபாய் சூட்டில் தங்கும்
நம்நாட்டு அரசியல்வாதிகளுக்கு
என்றும் ஒரு சிம்ம சொப்பனம்.
No comments:
Post a Comment