Wednesday, December 8, 2010

2010 டிசம்பர் மாதம் 07-ம் தேதி இரவு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குழித்துறை சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது எடுக்கப்பட்ட படங்களை காணுங்கள்....
வீடு நல்லாத்தான் இருக்கு ஆனால் இருப்பிடம்...

மார்த்தாண்டம் நேசமணி பாலம் அருகே உள்ள ஒரு வீடு தண்ணீரில் மூழ்கி கிடக்கும் காட்சி

வாழை தண்ணீரை குடிக்கலாம், தண்ணீர் வாழையை குடிக்கக் கூடாதா..
விரியோடு பகுதியில் மூழ்கிக்கிடக்கும் வாழைத்தோட்டம்

இன்னும் கொஞ்சம் தான் பாக்கி...

குழித்துறை புதிய பாலத்திலிருந்து பழைய பாலத்தின் தோற்றம்

லேய்.. கிடைச்சது வரைக்கும் மிச்சம் .. சீக்கிரம் பொறுக்கு...

வீடுகளிலிருந்து பொருட்களை மீட்டுச் செல்லும் மக்கள்

நம்மையெல்லாம் காப்பாத்துவான்னு நினைச்சா.. அவனுக்கே இந்த கதியா?

தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் வெட்டுவெந்தி கண்டன் சாஸ்தா கோயில்

ஆண்டு தோறும் கண்காட்சி போட்டு என்னை பார்க்கிற இல்ல... இப்ப நான் உன்னை பார்க்கிறேன்...

விஎல்சி அரங்கை மூழ்கடித்து ஓடும் தாமிரபரணி

Tuesday, November 23, 2010

பிடுங்கி எறியப்பட்டவர்கள்....

நாங்கள் பிடுங்கி எறியப்பட்டவர்கள்
மீண்டும் மீண்டும்
பிடுங்கி எறியப்படுபவர்கள்.....


கால்வாய் கரையோர வயல்கள்
பிளாட்டுகளாய் கீறப்பட்டபோது.....


குளங்களில் தண்ணீருக்கு பதில் மண் நிரப்பி
அரசு அலுவலகங்களை,
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை நட்ட போது......


சாலைகளை அகலப்படுத்த நடைமேடைகள்
இடிக்கப்பட்ட போது.....


மலை நடுவே புறம்போக்கு நிலத்துக்கு
முதலாளி பட்டா பெற்ற போது.....


நாங்கள் பிடுங்கப்பட்டவர்கள்.....


எங்கே நாங்கள் எங்களை நட்டுக்கொள்ள...
தேடிக்கொண்டிருக்கிறோம்.....


என்னப்பன் என்னை
மரமாக படைக்க முடிந்திருந்தால்......


என்னன்னை என்னை
மரமாக நட்டிருந்தால்.....


நானும் கடைசிவரை பிடுங்கப்படாமல் இருந்திருப்பேனோ?

Monday, May 17, 2010

வயல்

வரம்பு கடந்து வரப்பு மூடும் வயல் வெளிகள்...
காலை பனித்துளிகளை இலை நுனிகளில்
தாங்கி நிற்கும் பசுந்தாள்கள்....

மேல்வயல் தண்ணீரை கீழ்வயலுக்கு பாய்ச்சி
யாருக்காகவோ காத்திருந்து
யார் காலடி ஓசைக்கோ வளைக்குள் புகும் நண்டுகள்...

பசுமை முட்டி நிற்கும் வயல்களில்
அறிவியல் பாட அலை வடிவை உருவாக்கி ஓடும்
இளம் தென்றல் காற்று...

வள்ளியும் மறத்தியும் களை பறிக்க
முத்துச்சாமி உரம் வீச செழித்து
வளரும் எங்கள் வயல்......

கோடை என்றால் உழுந்து, பயறு பறிக்க
பனையோலை பெட்டியோடு அதிகாலையில் 
இழுத்துச் செல்லும் அம்மா........

இவற்றோடு......
பக்கத்து வாழைத்தோப்பு கான்களில்* மிதந்து கிடந்து
கொர் கொரிக்கும் பச்சை தவளைகளை
பிடிக்கப்போய் 
நிக்கர் நனைந்து திரும்பி....
உழுந்தும் பறிக்காமல் புல்லும் பிடுங்காமல்
விளையாட்டாய் கழிந்தன எனது நாட்கள்......

இவற்றை எல்லாம் உங்களுக்கு காட்ட
என்னிடத்தில் இப்போது வயலில்லை.
வெயிலில் வெடித்து சிதறும் ரப்பர் கொட்டைகள்
நிறைந்த ரப்பர் காடுகள் மட்டும்.....

* கான்கள் - வாழைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வெட்டப்படும் ஆழமான வாய்கால்கள்

Thursday, February 4, 2010

சிம்ம சொப்பனம்.......

வாகனத்துக்கு காத்திருக்காமல்
ரயிலின் நேரத்துக்கு
நீ நடந்து சென்ற
மீனாட்சிபுரம் குறுக்கு தெருக்கள்
உன்னை தேடுகின்றன.

ஜவுளிக்கடை கவர்களை
காணும் போதெல்லாம்
நீ மடக்கி எடுத்துச் சென்ற
ஒற்றை வேட்டியும் சட்டையும்
நினைவில் நிழலாடுகிறது.

எப்போதாவது பேருந்தில் ஏறும் போது
நெடும்பயண களைப்போடு
கக்கத்தில் துணி கவரோடு
நிற்பதைக் கண்டு
கண்டக்டர் சீட் ஒதுக்கி தந்து
நீ அமர்ந்தது நினைவாகிறது.

வயல் கொன்று மனை அமைக்கும்
புல்டோசர்களை காணுகையில்
சோவென கொட்டும் மழையில்
புறம்போக்கு வாசிகளின் குடிகாக்க
புல்டோசர் முன் நின்று
நிறுத்து......
என கர்ச்சிக்கையில்
உன் உதட்டில் விழுந்தோடிய
நீர் துளிகள் எனக்குள் உயிர் கொள்ளும்.

ஊரிலிருந்து வந்தவரை
கட்டிலில் படுக்க வைத்து
தரையோரம் பாய் விரித்து
மெய் மறந்து தூங்கிப் பழகிய நீ..
ஒரு நாளைக்கு
ஒரு லட்சம் ரூபாய் சூட்டில் தங்கும்
நம்நாட்டு அரசியல்வாதிகளுக்கு
என்றும் ஒரு சிம்ம சொப்பனம்.

அவன் போகிறான்........

"நான் பள்ளிக்கூடத்தில் ஹாஸ்டலில் நிற்கிறேன். வீட்டுக்கு வரவில்லை"
"ஏன்?"
"பள்ளிக்கூடத்தில் இருக்க அதிக விரும்பம்"
"அப்பா, அம்மா, அக்கா, பாட்டி, தாத்தா எல்லாரும் வேண்டாமா?"
"வேண்டாம்..."
"இரவில் அப்பா, அம்மாவை தேட மாட்டாயா?"
"மாட்டேன்"
"இரவில் பயப்பட மாட்டாயா?"
"டேனியல் அண்ணன் கையை பிடித்துக் கொள்வேன்."
இது மூன்றாவது படிக்கும் பையனினுக்கும் அவனது அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் என்று யாரவது சொன்னால் நம்ப இயலாது தான். ஆனால் அது தான் உண்மை.
எனது காது கேளாத மகனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் தான் இது. என்ன பதில் சொல்ல... எப்படி சமாதானப்படுத்த.... தெரியவில்லை. திடீரென மனதுக்குள் ஒரு வெற்றிடம். ஏன்? எப்படி? யாரால்? எதற்கு?...... என அடுக்கடுக்காக கேள்விகள் துளைத்து எடுக்க தலையில் தாங்க முடியாத சுமையை தூக்கி வைத்தது போன்ற உண்ர்வு. அலையாடி மகிழ்வித்துக் கொண்டிருந்த அலை திடீரென மேலெழும்பி விழுங்க வருவது போன்ற உண்ர்வு. அசையாமல் மகனை ஆழ்ந்து பார்த்தேன். கையை பிடித்து பக்கத்தில் இழுத்தேன். ஏதோ ஒப்புக்கு நின்றவன் கையை விலக்கிக் கொண்டு அவனது மொழியில் பேசுகிறான்.
"பள்ளிக்கூடத்தில் ரெஜி, டேனியல் அண்ணன் எல்லாம் இருக்காங்க. நான் அவங்கக்கூட இருப்பேன். சண்டை போட மாட்டேன். நல்ல பிள்ளையாக இருப்பேன்." அலமாரியின் மேலே இருந்த பையைக்காட்டி "அந்த பையில துணி, பிரஸ், பேஸ்ட் எல்லாம் வைத்துக் கொண்டு போகிறேன்." என தெள்ளிய திட்டத்தை கூறுவது போல அடுக்கிக் கொண்டே போகிறான்.
என் கண்ணில் கண்ணீர் பனிக்கிறது. என்ன பதில் சொல்ல.... தத்தளிக்கிறது மனது. "அவங்க வீடுகள் எல்லாம் தூரத்தில இருக்கு. அதனாலத்தான் பள்ளிக்கூடத்தில இருக்காங்க. உன்னை அப்பா தினமும் கொண்டு விடுகிறேனே...." என்றவுடன் சிணுங்க தொடங்கினான். இது அவனது பிடிவாதத்தின் தொடக்கம்.
அருகில் வந்த மனைவியிடம் கூறினேன். அவள் விளையாட்டுக்காக கூறுகிறேன் என நினைத்து "போ போ காவ்யா மட்டும் வீட்டில் இருக்கட்டும். சைக்கிள் மிதிக்கட்டும். உனக்கு கோபம் வரும் போது பள்ளிகூடத்தில் சாரை அடி....." என்றவளிடம் "நான் கோபப்படமாட்டேன். நல்ல பிள்ளையாக இருப்பேன்" என்று என் தோளில் சாய்ந்து அடம் பிடிக்க தொடங்கினான்.
மனைவிக்கும் விளையாட்டல்ல.... உண்மை தான்.... என புரியத் தொடங்கியது. "அவனை திட்டவோ அடிக்கவோ செய்தாயா?" எனக் கேட்ட போது இல்லை என மறுத்தாள்.
அவனுக்கு காது கேட்கவில்லை என தெரிந்தவுடன் எங்கெங்கோ அலைந்து திரிந்து, வைத்தியம் குறித்து விசாரித்து கடைசியில் அடைக்கலமாய் கிடைத்தது தான் நாகர்கோவிலில் அவன் படிக்கும் பள்ளி. பள்ளி துவங்கிய கிறிஸ்டோபர் சார் அதை திறம்பட அர்ப்பணிப்புடன் நடத்தி வருகிறார். காது கேளாத குழந்தைகளை உரிய பயிற்சி கொடுத்து பேச வைக்க வேண்டும் என்பது தான் அவரது கனவு. கேட்க முடியாததால், ஒலிகள் ஓசைகள் மூளையில் பதிய முடியாததால், அவற்றை திரும்ப ஒலிக்க முடியாது என்பது அறிவியல். ஆனால் அதை உரிய பயிற்சியின் மூலம் மாற்றி அந்த குழந்தைகள் அம்மா.... அப்பா... என பெற்றவர்களை அழைக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தம் தான் சாரின் சம்பளம்.
அந்த அடிப்படையில் ஒரல் முறையில் கற்பிக்கும் பள்ளி இது. பள்ளி்க்கூடத்தில் ஹாஸ்டல் இல்லை. ஆனால் தென்காசி. தூத்துகுடி, மதுரை என தொலைவில் உள்ள சில மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் ஒரு அறையில் தங்கிக் கொள்கிறார்கள். அது தான் எனது மகன் கூறும் ஹாஸ்டல்.
படிப்பதில் எழுதுவதில் எல்லாம் அவன் நன்றாகவே இருந்தான். அவனது குறும்புத்தனம் தான் எல்லோருக்கும் பெரிய குறையாக தெரிந்தது. அவன் செய்து கொண்டிருக்க ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்க வேண்டும். செய்ய ஒன்றும் இல்லை என்றால் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி, தாத்தா என யாரையாவது ஏதாவது செய்து கொண்டிருப்பான். அவன் வீட்டில் இருந்தால் "எங்காவது ஒழிஞ்சு போயிருல" என்ற தாயரின் ஆற்றாமையோ "லே அடிக்காதல" என்ற அக்காவின் கூக்குரலோ, "ஐயோ கை என்னமா வலிக்குது" என்ற பாட்டியின் இயலாமையோ "அப்படி செய்யாதல" என்ற தாத்தாவின் அதட்டலோ "கவின் சொன்னாக் கேளு" என்ற எனது மிரட்டலோ வீட்டில் கேட்டுக் கொண்டு தான் இருக்கும். அவன் சும்மா இருக்கிறான் என்று எப்போதும் யாருமே சொல்ல முடியாது. அப்படி ஒரு குறும்பு.
அவனுக்காக ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கிளம்பி விட்டால் கொஞ்ச நேரம் ஊர் சுத்தி வருவான். நண்பர்களோடு குளிக்கச் சென்றால் கொஞ்ச நேரம் கால்வாயில் குதித்து கொட்டமடிப்பான். பின்னர் நண்பர்களோடு விளையாடுவான். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் போது வீட்டில் மேற்குறிப்பிட்ட சத்தங்கள் மிக சாதாரணம்.
இதனால் தான் அவனுக்கு வீடு வெறுத்து விட்டதோ. இருக்காது.... என்ன குறும்பு செய்தாலும் அனைத்துக்கும் நடுவே வாஞ்சையோடு முத்தம் தந்துவிட்டு கன்னத்தில் மெல்ல கடித்து செல்லும் குறும்பு அவன் என்னை, எங்களை வெறுக்கிறான் என்பதன் அடையாளம் அல்ல என உறுதியாய் கூறியது மனது.
பின்னர் என்ன காரணம்?
அடம் பிடித்து வாங்கிய விளையாட்டு பொருள் சில நிமிடங்களில் பழதாகி போகும் அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறதோ? புதிது புதிதாய் ஏதோ தேடுகிறானோ? ஏதோ ஒன்று...
அவன் கூறினால் தெரியும்...
கூறுவான் என்ற நம்பிக்கை...
கூற திரும்பி வருவான்...
வாய் நிறைய முத்தக் கடியோடு...

தீவு

அடர்ந்த கூட்டத்தின் நடுவே அமைந்த தீவில்
தன்னந்தனியனாக திரிகிறேன் நான்.
உறவுகள் ஒதுக்குகையில் பதறாத உணர்வுகள்
நீ ஒதுக்குகையில் கொந்தளிக்கிறது....

முரண்டோடும் மனக்குதிரையை
கட்ட முனைந்து தோற்றபோது
போர்களச் சுவடுகள்
விலா எலும்புகளை கிழித்துக் கொண்டு வலிக்கிறது.

நினைத்ததை சாதிப்பதில்
உனது உறுதியை மிரண்டு போய் பார்க்கிறேன்.
செந்துணி கண்ட காளையாய்
ஓடத்துடிக்கும் மனதுக்கு
பல நேரங்களில் மௌனம் கடிவாளமாகிறது.

தோற்று போவதின் இன்பத்தை
ஒன்றுக்கு பலதாய் உணர்ந்த பின்பும்
மீண்டும் மீண்டும் தோற்காமலிருக்க
முனைப்போடு முனையுது மனசு.

மழையோ... பனியோ... புயலோ....
இல்லாத நாளில்
நடுங்கி ஒடுங்குது உடம்பு.

எனக்காகவோ... உனக்காகவோ... யாருக்காகவோ...
தொடரத்தான் செய்கிறது காத்திருப்பு.

Wednesday, January 13, 2010

ஊனமில்லா ஊனம்


அவன் அவன்தான்
ரொம்ப சாதாரணமாகவே இருக்கிறான்.
யாரும் அவனை தனித்து
அடையாளம் காண முடிவதில்லை.
அவனுடைய ஊனத்தையும் தான்.
இயற்கையின் படைப்பில்
அவனிடத்தில் தோற்றக்குறைகள் இல்லை.

ஆனால் குறையோ மிகப்பெரிது
எந்த கூப்பாடும்.....
அமர்களமும்....
கும்மாளமும்....
இரைச்சலும்.....
ஒப்பாரியும்.....
.............
அவன் செவிகளுக்கு எட்டுவதில்லை.

எல்லாவற்றிற்கும் என்.. உன்...
முகத்தை மட்டும் பார்க்கிறான்.
ஆனால் உணர்வுகள் அதிகம்
உன்... என்... ஒவ்வொரு உணர்ச்சியையும்
அவன் புரிந்து கொள்கிறான்.
அவனது உணர்ச்சியை வெளிக்காட்டுகிறான்.
அது சில நேரத்தில்
மகிழ்ச்சியாய் பூக்கிறது...
பல நேரத்தில்
எரிமலையாய் வெடிக்கிறது...
அவனை புரியவில்லை என்ற ஆதங்கத்தில்.

கண்ணே நாங்கள் அனைவரும்
மற்றவர்களை விட அதிகமாகவே
உன்னை புரிகிறோம்.
ஆனால் அதனை நீ புரிந்து கொள்ள
ஏன் தாமதம்.