Sunday, October 13, 2019


எழுத்தாளர் நக்கீரன் எழுதிய காடோடி நாவலை  இன்று படித்து முடித்தேன்.
2014ம் வருடம் வெளிவந்த நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்காக என்னை நானே கேள்வி கேட்கிறேன்.
நாவல் குறித்து நான் எந்த விமர்சனமும் வைக்கப்போவதில்லை. ஏனெனில் வாசிப்பு ஒரு பேரனுபவம். அதனை ஒருவர் மற்றவருக்கு கடத்துவது என்பது சாத்தியமில்லை என்று நான் கருதுகிறேன்.
ஆனால் நாவலைப்பற்றி என் முகநூல் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா. அவர்களும் விடுபட்டு போகாமல் தாமதமாகவேனும் படிக்க வேண்டும் என்ற அவாவில்  சிறு அறிமுகம்.
போர்னியோ(தற்போதைய மலேசியா) பகுதியில் காட்டு மரம் வெட்டும் நிறுவனத்தில் வேலை செய்பவர் தான் கதைச் சொல்லி. ஒரு சுற்றுலா பயணி போல காட்டை, காட்டு விலங்குகளை காண ஆரவம் கொண்ட அவர் சந்திக்கும் காடோடி(நமது மொழில் காட்டு மனிதர், பழங்குடியின மனிதர், மலைவாழ் மக்கள் எனப் பல...) மூலம் அவர் இயற்கையை காடோடிகளை புரிந்து கொள்ளுதல். தன் நிறுவனத்தால் வெட்டப்பட்ட மரங்களுக்காக அழும் மனிதனாக வெளியேறுகிறார் கதைச் சொல்லி.
நாவலை குறித்துச் சொல்ல நாவலிலிருந்து சில வரிகள்.....
 தொகுதி முழுக்க மரங்களின் அழிவு. நிழல்களின் இறப்பாய் மாறியிருக்கிறது.
பணம் ஈட்டும் ஒரு கருவியாய் காட்டைப் பார்க்கத் தெரியாத ஓர் ஆன்மாவின் தூயச் சொற்கள் பலிக்கும்.
நீங்கள் திரும்பிச் செல்லும்போது இக்காடு பெரிய பிணமாகக் கிடக்கும்.  அவ்வளவு பெரிய பிணத்துக்கும் ஒரு பிணப்பெட்டி செய்து கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்
எந்தவொரு குறிப்பிட்ட இடத்தின் மீதோ மனிதரின் மீதோ பற்றுக் கொள்ளக் கூடாது என்பதே அது. அது மனிதனை இறுக்கட்டிப் போட்டுவிடும் என்று நம்பினேன்.
நூலை வாங்கி படிக்க விரும்புவோருக்கு,
udumalai.com – 73 73 73 77 42
விலை – 260/-

Saturday, December 19, 2015

இசைஞானியின் நடத்தை



ஞானியின் நடத்தை


சில தினங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜாவிடம் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் இப்போது பரவலாக பேசப்பட்டு வரும் அனிருத், சிம்புவால் வெளியிடப்பட்டு பிரச்சனைக்குள்ளாகி இருக்கும் பீப் பாடல் பற்றி கருத்துக் கூறுமாறு கேட்டார்.
கோபத்தில் உதடு துடிக்க ஞானி "டேய் உனக்கு அறிவிருக்கா.... என்கிட்ட கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதையிருக்கு, என்ன தகுதியிருக்கு எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு" தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதில் அந்தச் செய்தியாளர் செய்த தவறு என்ன? சமூகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு குறித்து அதேத் துறையைச் சேர்ந்த ஒருவரிடம் கருத்துக் கேட்டதில் எந்தவித தவறும் நிகழ்ந்து விட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் இசை ஞானியின் நடவடிக்கையால் வெளிப்பட்டது என்ன.... தான் சமூகத்தில் உயர்ந்தவன். வசதி வாய்ப்புகள், புகழ் என பல உச்சங்களைத் தொட்டவன். என்னைக் கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்ற அகங்காரம். சக மனிதனை மதிக்கத் தெரியாத துர்குணம் எல்லாம் அவரிமிருந்து வெளிப்பட்டது.
ஒரு நிலைக்கு உயர்ந்தபின்பு பொது வெளிக்கு வர எல்லோரிடத்திலும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பது உண்மை. இதற்கு முக்கிய காரணம் தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கி இருப்பவன் நல்லவன் என நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் நீ உலாவினால் கெட்டவனாகி விடுவாய் என்ற நம்பிக்கையற்ற நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு உயர் நிலையை அடைந்தபின்பு கீழ் நிலையைப் பற்றி சிந்திக்காத மனிதன் சக மனிதனின் துன்பத்தை அறிந்து கொள்ள முயலவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனிதனை உயர்ந்தவன் என்று இந்த சமூகம் போற்றுவது மிகப்பெரிய நகை முரண்.

Thursday, July 3, 2014

மறையாத செஞ்சூரியன்

வங்கத்தில் ஒரு செஞ்சூரியன் மறைந்தான் - அவன்
எண்ணத்தில் மக்கள் மனமஞ்சத்தில் என்றும் மறையான்
சட்டம் பயின்று சட்டாம்பிள்ளையாக நினைத்தவன்
சிவப்பை படித்து மக்கள்படைக்கு தளபதியானான்
இயற்கை மறைக்கும் மனிதர்களில் பலரை
அதனில் நீயும் ஒன்றென எண்ணும்
அற்பர் புரிவர் நாளைய நாளில்
இது போல் இல்லை இல்லை என
புரிந்தவர் போற்றுவர் என்றும்.

சமூக மதிப்பு

மதிப்பு எப்படி வருகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு நபருடைய மதிப்பு அவருடைய செயல் மூலம் வடிவம் பெறுகிறது என்பது தான் சரியாக இருக்கும். அவ்வாறு ஒருவரது செயலால் வடிவம் பெறும் மதிப்பு அவருடைய தொடர் நடவடிக்கைகள் மூலம் மேலும் பரிமாணங்களை பெறுகிறது.
தனி மனித மதிப்புகள் எப்போதும் அவருடைய சுய நடவடிக்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மைதான்.
ஆனால் இளம் பருவத்தில் செயல்களை விட அவரது சூழல் முக்கியத்துவம் பெறுகிறது. அவரது குடும்பத்தார், பரம்பரை போன்றவற்றின் அடிப்படையில் சமூகம் அவரிடமிருந்து சில குணாதிசயங்களை எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்பு ஒத்துப்போக வேண்டும் என்ற சில நிர்பந்தங்களையும் அவருக்கு உருவாக்கும்.
அவ்வாறு நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களாக இருப்பதற்கு தங்களது மூதாதையர்கள் மூலமாக ஒரு உந்துதல் கூடுதலாக கிடைக்கிறது.
இதே நிலை இழிகுலத்தில் பிறந்தவர்க்கு கிடைப்பது இல்லை. இளம் வயதில் அவர் செய்யும் இழிச்செயல்கள் கூட அவரது பிறப்பால் அப்படித்தான் செய்வான் என்று ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே உயர்குடிபிறப்பு என்பது சமூகத்தின் ஒவ்வொருவர் மீதும் பல தாக்கங்களை ஏற்படுத்தத்தான் செய்யும், செய்கிறது.

ஒரு நாட்குறிப்பு

ஒரு நாள் எவ்வளவு வேகமாக எவ்வளவு எளிதாக கடந்து செல்கிறது என யோசித்து பார்த்த போது தான் இந்த எழுத்து வடிவம் பெற்றது.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பல்துலக்கி எனக்கான டீயை காய்த்து எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் அந்த குளிர் பொருந்திய காலை பொழுதில் உட்கார்ந்த வலைப்பக்கங்களை புரட்டி பார்த்தேன். இன்றைக்காவது ஆசிரியர் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் என்ற நப்பாசையில். தோல்வியில் முடிய கம்ப்யூட்டரை மூடி விட்டு காலை பத்திரிகை வாங்க வீட்டை விட்டு கிளம்பி சென்றேன்.
பத்திரிகை வாங்கிவிட்டு திருவிதாங்கோட்டிற்கான தீக்கதிர் பத்திரிகைகளையும் எடுத்து விட்டு கிளப்பினேன். குறுக்கே வந்த நாய்க்கு பிரேக் போட்ட போது எதிரே வந்தவரை இடித்து விட்டு ஓடியது நாய். "கலங்காத்தால இது வேறயா. போன காரியம் உருப்பட்டாப்பில தான்" என்று அங்கலாய்த்துக் கொண்டு வீதிக்கு வந்தவர் திரும்ப வீட்டிற்கு போனார்.
நானும் காலையில் வரும் போது பல நாய்கள் குறுக்கே வந்தன. எந்த நாயின் வருகையும் என்னை ஒன்றும் செய்யவில்லையே. அறிவியல் வளருது என்கிறார்கள். ஆனால் எனது அனுபவத்தில் மூட நம்பி்க்கைகள் தான் வளருகிறது. தொலைகாட்சியும் அதிவேக தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களும் வெகுதொலைவில் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கையை கூட தனி மனிதனை சுற்றி மேய விட்டிருக்கிறது.
அதனால் தான் பல இப்படியான மனிதர்களை அது எளிதில் மேய்ந்து விடுகிறது. இப்படியான மனிதன் அன்று செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அந்த நாயை காரணியாக மாற்றி விடுகிறான். தனது செயலில் ஏற்படும் குறையை கண்டறிந்து களையும் எண்ணமே அவனிடம் எழாது.

21-03-2011

இன்று முற்பகல் திருமதி ஷெரினிடம் பள்ளிக்கூட இணைய தளத்தை வெளியிடுவது குறித்து பேசினேன்.
ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்கு வர முடியவில்லை. இணையத்தை வெளியிட எதிர்கால திட்டங்களை முடிவு செய்வது தேவை எனக் கூறுவது எதற்கு எனத் தெரியவில்லை. வாதங்கள் பொருளற்றதாக இருப்பதாகத் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அப்படியானால் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என கோபமான பதில் வந்தபோது அப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கமாட்டேன் என ஆணித்தரமாகக் கூறி விட்டேன்.
பெங்களூரில் இருக்கும் ஒரு பெண்மணி இது போன்ற இணைய தள கருத்தெழுதுதலில் சிறப்பானவர் எனத் திடீரெனக் கூறியபோது சிரிப்பாக வந்தது. எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பது தான் சிரிப்பை வரவழைக்கிறது.
அந்த பெண்மணி தன்னைப் பற்றி கூறியவற்றை வைத்தே முடிவெடுப்பதாக எனக்குத் தோன்றியது.
பின்னர் எப்.எம் சிஸ்டம் குறித்து ஆலோசனைச் செய்ய யாரையோக் கூப்பிடுகிறார்கள். அவரிடம் 30-ம் தேதி பேச முடியுமா எனக் கேட்கிறார்கள். எல்லாமே இணையத்தை வெளியிடுவதை தாமதப்படுத்த மட்டுமே செய்கிறது. வேறு என்னச் சொல்ல இருக்கிறது.
கிறிஸ்டோபர் சாரிடம் இது குறித்து பேசிவிட்டேன். எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் சுற்றி நின்று கைச்சூண்டி கேலி பேசும் கூட்டத்தின் நடுவே நிறுத்தப்பட்டவன் போலாவேன் எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

கட்டணம்


ம. மிக்கேல் ராஜ்
First Published : 14 Nov 2010 03:37:00 PM IST தினமணிக்கதிர்



நண்பகல் இரண்டு மணி. மண்டையைப் பிளக்கிற வெயில். சைக்கிளை மிதிக்கும் ரஹீம் கால்களில் அனல் வாரி கொட்டுவது போன்று வெயிலின் உக்கிரம் தகிக்கிறது. சோர்வாக காணப்பட்ட அவனது கால்கள் மெதுவாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தன. மங்கிய கண்களில் சாலையின் கானல் நீர் கொதித்து மறிக்கிறது. தலை முதல் கால் வரை வழிந்தோடிய வியர்வைத் துளிகள் அவனது அவஸ்தையை மேலும் அதிகமாக்கி கொண்டிருந்தது.
சைக்கிள் கேரியரில் இருந்த பழைய டிரங்கு பெட்டியில் துருப்பிடித்த பழைய சைக்கிள் பாகங்கள், ஓட்டை பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் என ஆக்கர் பொருட்கள் நிரம்பி கிடந்தன. இரு பக்கமும் தொங்கிக் கொண்டிருந்த கோணிப்பைகளில் ஒன்றில் கிழிந்த தாள்களும் மற்றொன்றில் கண்ணாடி குப்பிகளுமாக நிரம்பி வழிந்தன. இன்றைக்கு வழக்கத்தைவிட கூடுதலாகவே ஆக்கர் பொருட்கள் வாங்கி இருந்தான். காலையில் கடை முதலாளியிடம் வாங்கிய முன்பணம் ஐநூறு போக முந்நூறு ரூபாயாவது மீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
இன்றைக்கு வட்டிக்காரனிடமிருந்து ரூபாய் வாங்கிவிட வேண்டும். ரிஷ்வானின் பள்ளியில் பணம் கட்டச் சொல்லி ஒருவாரம் ஆகிவிட்டது. நேற்று இரவு எழுத நோட்டு கிடைக்கவில்லை எனப் பழைய நோட்டுகளிலிருந்து எழுதப்படாத பேப்பர்களைக் கிழித்து எடுத்துக் கட்டிக்கொண்டிருந்தான்... என்று மனதுக்குள் எண்ணியவாறு சைக்கிள் ஹேண்டிலில் சுற்றியிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தான்.
ரிஷ்வான் ரஹீமின் மூத்த மகன். பக்கத்து டவுனிலுள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறான். குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் பருவம் வந்தபோது, பக்கத்து வீடுகளில் உள்ள பிள்ளைகள் டை கட்டி ஷூ போட்டு மிடுக்காக வேன்கள், பஸ்களில் ஏறி பள்ளிக்கூடம் செல்வதைக் கண்டபோது தனது பிள்ளையும் அது போல போக வேண்டும், படிக்க வேண்டும் என்ற மனைவியின் ஆசையோடு தனது பிள்ளை தன்னைப்போல கஷ்டப்படக் கூடாது என்ற ரஹீமின் எண்ணமும் சேர்ந்து கொண்டபோது ரிஷ்வான் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.
ரிஷ்வான் நன்றாக படித்து வகுப்பில்  ஒன்றாவது, இரண்டாவது என ரேங்க் வாங்கியபோது மகிழ்ச்சி அதிகமானது. எப்பாடுபட்டாவது மகனைப் படிக்க வைத்து பெரிய வேலையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. ஆனால் நிதி நிலைமைதான் மிகவும் கஷ்டப்படுத்தியது. என்னதான் அன்றாடம் உழைத்தாலும் கடனுக்கு மேல் கடன் வாங்கிதான் நாட்களை கழிக்க முடிந்தது.
ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் நாட்களில் வட்டிக்காரனைத் தேடி அலைந்து வட்டிக்கு  ரூபாய் வாங்கும் போது அடுத்த தடவை வட்டிக்கு வாங்கக்கூடாது  என எண்ணிக் கொண்டுதான் வாங்கினான். ஆனால் அவனது எண்ணத்தையும் மீறி வட்டிக் கடன் அதிகரிக்கிறதே தவிர தீர்ந்தபாடில்லை. அன்றாடச்செலவுக்கே தனது தொழில் கைகொடுக்காதபோது அவ்வப்போது வரும் மருத்துவச் செலவு, குடும்பத்தில் வரும் திருமணம் போன்ற தேவைகளுக்கு வட்டிக்காரனை நம்பியே காலம் ஓடிக் கொண்டிருந்தது. வட்டிக்காரன் நிரந்தர எதிரியாகவும் பிரிக்க முடியாத நண்பனாகவும் மாறி ரஹீமை அலைக்கழித்துக் கொண்டிருந்தான்.
மகள்  ஆயிஷாவும் முதல் இரண்டு வருடம் அதே பள்ளியில்தான் படித்தாள். நன்றாகவே படித்து வந்தாலும் ஏதோ காரணம் கூறி அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டான். பையனை படிக்க வைக்கிறான். பெண்ணை கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல விட்டிருக்கான் என்ற உறவுக்காரர்களின் பேச்சுக்களுக்குக் காது கொடுக்கவில்லை. அதோடு ரிஷ்வானையும் பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
ஆனால் ரிஷ்வான் பத்தாம் வகுப்பில்  452 மார்க் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி பெற்றபோது எல்லாம் மாறிப்போனது. எல்லோரும் கொண்டாடினர். பள்ளிக்கூடத்தில் அனைவரும் பாராட்டினர். நான்கு மார்க் கூடுதல் வாங்கியிருந்தால் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கலாம் எனப் பலரும் கூறியபோது மகனை நினைத்து பூரிப்படைந்தான்.
ஆனால் எல்லாம் முடிந்து டிசி வாங்கச் சென்றபோது பள்ளிக்கூட முதல்வருக்குச் சற்று மனக்கலக்கம் உண்டானது. அதோடு அவர், ""நான் கரஸ்பாண்டன்ட்டுக்கிட்ட சொல்லி கொஞ்சம் பீûஸக் குறைக்கச் சொல்றேன்'' என்றார். அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தான்.
பள்ளிக்கூட  முதல்வர் எழுதிக் கொடுத்த துண்டு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கரஸ்பாண்டன்டை பார்க்க காத்திருந்தான். டையும் பூட்ஸýம் போட்ட புத்தகக் கம்பெனி  பிரதிநிதிகள் எல்லாம் பார்த்து சென்ற பிறகு ரஹீம் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டான். முதல்வர் கொடுத்த துண்டு சீட்டைக் கொடுத்தவுடன் மேலும் கீழும் பார்த்துவிட்டு ""ரிஷ்வான் அப்பாதானே?''
என்று மட்டும் சொல்லிக்கொண்டு போனை எடுத்துப் பேசினார். பின்னர் ""நான் பிரின்சிபாலிடம் சொல்லியிருக்கேன். பையனை நல்லா படிக்கச் சொல்லுங்க. பிளஸ் டூல முதல் மார்க் வாங்கணும்'' என்று கனிவோடு கூறினார்.
ஆபீஸில் வந்து பீஸ் கட்டபோனபோது 12 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். கரஸ்பாண்டன்ட்டை பார்த்ததாகக் கூறியபோது ""ஆமா, பிளஸ் ஒன்னுக்கு 12 ஆயிரத்து எண்ணூறு பீஸ் எண்ணூறு குறைச்சிருக்கில்ல'' என்றபோது கரஸ்பாண்டன்டின் கனிவான பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் மலையாய் உயர்ந்தது.
பீûஸக்  கடன் வாங்கி கட்டி முடித்தான். பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்த நிலையில் இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் எடுப்பதாகவும் அதற்குரிய நோட்டு புத்தகத்துக்கு இரண்டாயிரத்து நானூறு கட்ட வேண்டும் என்று கூறியபோது மீண்டும் வட்டிக்காரனைத் தேடினான் ரஹீம்.
நேற்று கிடைத்த நூற்று எண்பது ரூபாயையும் பழைய கடன் அடைக்க அவனுக்குத்தான் கொடுத்தான். அவனுக்கு மூன்று தவணை பாக்கி. அதைக் கொடுத்து முடித்தால்தான் அடுத்து பணம் தருவான். ஆனால் இன்று எப்படியாவது கையில் கிடைக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு மூவாயிரம் ரூபாய் வாங்கிவிட வேண்டும். மூவாயிரம் வாங்கினால்தான் ரிஷ்வானுக்கு பள்ளியில் கொடுக்க வேண்டிய இரண்டாயிரத்து நானூறு போக ஆயிஷாவுக்கு ஒரு செட் யூனிபார்ம் எடுக்கமுடியும். ஒரு செட் துணியை வைத்துக்கொண்டு தினமும் போட்டு வருவதால் அது சுருண்டு போய்க் கந்தலாகக் கிடக்கிறது. மீதி ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு நாளாவது நல்ல மீன் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்க ஆக்கர் கடைக்கு வந்து சேர்ந்தான்.
கடையில் முதலாளியில்லை. அவருடைய மச்சான்காரன்தான் இருந்தான். இவன் இப்ப ஆயிரம் குத்தஞ்சொல்லி உள்ளதையும் இல்லைன்னு சொல்லப் போறான் என வாயில் முணுமுணுத்துக் கொண்டே சைக்கிளை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான். ஒவ்வொரு சாக்குப்பையாக கீழே இறக்கி கைபார்த்து பொருட்களைத் தனித்தனியாக பிரிக்கத் தொடங்கினான்.
இதற்குள்ளாகக் கடைக்கு வந்த முதலாளி ""என்ன நேரத்தோடு வந்துட்ட? நல்ல கொய்த்தா?'' எனக் கேட்டுக் கொண்டே தராசுக்குப் பக்கத்தில் இருந்த, உடைந்து ஒட்டு போட்ட நாற்காலியில் உட்கார்ந்தார். தராசு தட்டிலிருந்து எடைக்கற்களை எடுத்து கீழே வைத்துவிட்டு தூசுகளை தட்டிவிட்டு எடைக்கற்களை மீண்டும் தராசு தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தார். மச்சான்காரன் எழுந்து வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போனான்.
யாரோ  ஒருவரை வண்டி இடித்துவிட்டதாக கூறிக்கொண்டுச் சென்றனர் மேற்கு தெரு பையன்கள். அவர்கள் பள்ளிக்கு போகாமல் கிரிக்கெட் மாட்ச் முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அதனை காற்றோட்டச் செய்தியாக கேட்ட ரஹிம் பொருட்களை கைபார்ப்பதில் கவனத்தை செலுத்தனார்.
பின்னர் சற்று நேரத்தில் அங்கு வந்த பக்கத்துக் கடை முதலாளி ""சாலி ஏதோ ஒரு பையன ஸ்கூல் பஸ் இடிச்சிச்சாம் உனக்கு தெரியுமா யாரு''ன்னு எனக் கேட்டுக் கொண்டே வந்தார். ""எப்பவாம்...'' என்ற கேள்விக்கு ""இப்பத்தான் சொல்றாங்க... வேற எதுவும் தெரியல. எனக்க மோன் சையது வீட்டிலதான் இருந்தான் போய்பாத்துவரச் சொல்லி அனுப்பினேன்'' என்று முடித்தார்.
அவர்களது  பேச்சு தொடர்ந்தது. ரஹீம்  ஆக்கரை பிரித்து தனித்தனி சாக்குகளில் வைத்து தராசு  தட்டில் வைக்க முதலாளி  எடை போட்டு பழைய பேப்பரில்  குறித்துக் கொண்டிருந்தார். எல்லா ஆக்கர் பொருட்களையும் எடைபோட்டு முடித்தபின்பு தனது பைகளை மடக்கி டிரங்கு பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த போது முதலாளி ""ரஹீமு இன்னக்கி உனக்கு கோளூதான். எண்ணூத்து நாப்பது ரூபாய் தேறியிருக்கு'' எனக் கூறியபோது சற்றே மகிழந்தான் ரஹிம்.
இன்றைக்கு வட்டிக்காரனிடம் முன்னூறு ரூபாய் கொடுத்து மூவாயிரம் ரூபாய் மீண்டும் வாங்கிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டே முதலாளி கொடுத்த  ரூபாயை வாங்கிக் கொண்டு சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து உருட்டத் தயாரானான். அப்போது சாலி கையிலிருந்த செல்போன் ஒலித்தது.
அவருடைய மகனிடமிருந்து வந்த அழைப்பில் சாலி பேசினார். ""லே யாருன்னு சொன்ன நம்ம ஆக்கர் ரஹீமின் மோனா...'' எனக் கேட்டுக் கொண்டே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார். எதிர் முனை குரல் தற்போது கேட்டது. ""ஏதோ பீஸ் கட்டலைன்னு ஸ்கூல்லண்டு வெளிய போகச் சொன்னாங்களாம்... இவன் வெளிய வந்தப்போ ஸ்கூல் பஸ்தான் இடிச்சிருக்கு. டயருக்கு அடியில தலை மாட்டிருக்கு. வண்டிய பின்னுக்கு தள்ளி இப்பத்தான் பிரேதத்த வெளிய எடுக்கிறாங்க. பிரேக் இல்லியோ என்னமோ பஸ் ஸ்கூல் காம்பவுண்டில இடிச்சி நிக்குது.''
இதனை கேட்ட ரஹிம் மூர்ச்சையாகி சாலையில் சாய்ந்தான். அவனது உழைப்பின் ஆதாரமான சைக்கிள் மறுபுறம் சரிந்தது.