Monday, November 21, 2011

எம்.வி. வெங்கட்ராம் நினைவு தமிழ்ச் சிறுகதைப் போட்டி


 தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அன்னை திறனேற்றப் பயிற்சித் திண்ணை (அதிதி) அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அவ்ராம்அமி அறக்கட்டளை, அதிதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து எம்.வி. வெங்கட்ராம் நினைவு தமிழ்ச் சிறுகதைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் எம்.வி. வெங்கட்ராம். 1993-ல் இவர் எழுதிய "காதுகள்' என்ற புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
மேலும், விக்ரஹநிவாசன் என்ற புனைபெயரில் இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். 14.1.2000-ல் மறைந்த எம்.வி. வெங்கட்ராம் நினைவாக நடத்தப்படவுள்ள இந்தப் போட்டியில், "வீடே மறுவாழ்வு இல்லம், பெற்றோரே மறுவாழ்வு நிபுணர், ஊரே மறுவாழ்வு இல்லம்' என்னும் கருத்தை மையமாக வைத்து, சொந்தக் கற்பனையில் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
6 முதல் 8 பக்கங்கள் வரை சிறுகதை எழுதப்பட்டு இருக்கலாம். சிறுகதை எழுதியவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன், சிறுகதைகளை நவம்பர் 30-க்குள் அனுப்ப வேண்டும். ஒருவர் 3 சிறுகதைகள் சமர்ப்பிக்கலாம். மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் சிறுவர் சிறுகதைகளை அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறுகதைகளுக்கு ஜனவரி 26-ல் நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும். சிறுகதையை, அதிதி அறக்கட்டளை, 142, கீழவெளி வீதி, மதுரை- 625 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நன்றி தினமணி

Monday, September 19, 2011

நகை

தனது பாம்படத்தையும்
தண்டையையும் மாற்றி
நவீனப் படுத்தப்பட்ட போது
முதலில் மறுத்த பாட்டி
புதிய நகையை
மகிழ்ந் தேற்றாள்…

கழுத்தில் முறுக்கு செயினும்
கையில் தங்க வளையல்களும்
காதில் தொங்கட்டானும்
இருந்தபோதும்
இப்படி மூழியாகவா
கல்யாண வீட்டுக்கு போகவென்ற
அம்மாவின் முணுமுணுப்பு ஒரு
தொடர்கதைத் தான்…

மனதொப்பா திருமணத்தில்
நகைகளை மட்டும் மகிழ்வோடு
ஏற்றுக் கொண்டாள்
தனது தங்கை…

தனது பதினொன்று பவுன்
முறுக்கு செயினை திருடன்
பறித்துப்போன பின்
அளவை மட்டும் குறைத்துக் கொண்டாள்
எனது மனைவி…

பொட்டுக் கம்மலை
விளையாடும் போது தொலைத்த
எனது மகள்
வேப்பங்குச்சியை சொருகுகிறாள்
காது துவாரம் அடையாமலிருக்க.

Wednesday, September 7, 2011

முறிவுகள்


உனக்கும் எனக்கும் சண்டையில்லை
உன்னப்பனுக்கும் என்னப்பனுக்கும் பகையில்லை

எங்காத்தாளும் உன்னாத்தாளும்தான்
ஒன்றாக வெற்றிலை வாங்கி
பங்கிட்டுக் கொண்டார்கள்

உன் வீட்டு பிள்ளைகளுக்கு
என் வீட்டு பிள்ளைகளும்
என் வீட்டு பிள்ளைகளுக்கு
உன் வீட்டு பிள்ளைகளும்தான்
விளையாட்டு தோழர்கள்

இதெல்லாம் ஒரு சமய மாநாட்டில்
எப்படி முறிந்து போனது…

Sunday, September 4, 2011

ரப்பருக்காய்...


நேற்றுவரை நீங்கள் தந்த இளநீரை
தான் நான் சுவைத்தேன்...

எங்கள் வீட்டு சமையலறையில் உங்கள்
தேங்காய்கள் உடைந்ததால்தான்
சமையல்கள் ருசித்தன...

உங்களது சில்லாட்டைகள், மட்டைகள்
எங்கள் வீட்டு அடுப்பில்தான் எரிந்தன...

உங்களது காவோலைகள் எங்கள்
மாட்டு தொழுவத்தின்
கூரையை வேய்ந்தன...

உங்களது இளந்தளிர் ஓலைகள்
எங்கள் ஊர் கோயிலில்
தோரணமாய் தொங்கின...
மாதா கோவிலில்
குருத்தோலை ஊர்வலமாக போனது...

எங்கள் ஊர் மாடனுக்கு சாமியாட
மாடப்பனுக்கு உங்களது பூவை
பிளிர்ந்து தந்தீர்கள்...

இத்தனை இருந்தும்
இன்று உங்கள் மூட்டில்
கோடாலி வைத்து விட்டேன்.
நாளை ரப்பர் தைகள் நட...

என்றாவது ஒருநாள்
சாலையோர இளநீர் கடையில்
வாடிப்போன சுவையற்ற
இளநீரைக் குடிக்கும்போது
உங்களது இளநீரின் சுவை
எனது நினைவை கிளறலாம்...

Saturday, August 20, 2011

மீண்ட தொடர்புகள்….


1992 ஜூலை முதல் 1994 மே வரையிலான காலகட்டம்…
வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு வருடங்கள்…
உறவுகள் வீணடித்ததாகக் கூறினாலும்
மனம் ஒப்புகொள்ள மறுக்கிறது.
நட்புகளின் ஆழங்கள் குறித்த தேடல்கள்
இன்றும் தொடர்வதால்
வீணல்ல அந்த வருடங்கள்
சம்பாத்தியங்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய வருடங்கள்…
நண்பர் பால்ராஜ்…
இனிய அப்பழுகற்ற நட்புக்கு இலக்கணமானவர்
நிறைய சாதிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்
சினிமா துறையை பற்றிய
அனைத்து வினாக்களுக்கும் அவரிடம் விடையுண்டு
அவருள் இருந்த நல்ல ஒரு படைப்பாளியை…
வல்லுநரை….
சமூக பார்வையாளராக மாற்றத் தவறிய
அவரது பெற்றோர் மீது…
சமூகத்தின் மீது…
எப்போதும் எனக்கு வருத்தம் உண்டு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு - நேற்று
ஒரு துடிப்பான தொடர்பு
என்ன மச்சான்…. எப்படிடா இருக்க….
என்ற குரல் கேட்டபோது எந்த மிகையுமில்லாமல்
கண்கள் பனித்தன.
இப்போது ஆசிரியர் பணி என்று அப்போதுதான் அறிந்தேன்
மகிழ்ச்சிதான்
ஆனால் ஒரு படைப்பாளியை இழந்த வருத்தம்
இப்போதும்.
நண்பர் சுரேஷ்…..
என்ன ஒரு திறமை என வியக்க வைத்த சுரேஷ்
நடனம்…
விளையாட்டு…
இசையின் மீதான ஆர்வம்…
எப்போதும் சிரிப்போடு இருக்கும் முகம்…
மச்சி புதிய ஜட்டி வாங்கியிருக்கேன்…
பார்ட்டிக்கு மறக்காமல் வந்திடு
என அழைக்கும் அவரது துள்ளல் பேச்சு
சினிமா துறையில் சாதிப்பேன்
என்ற அவரது பேச்சு கனவாகி போயிருக்கிறது
வங்கி பணியோடு வாழ்க்கையில்
திருப்திகொள்ள பழகி விட்டார்
இல்லை
இந்த சமூகம் பழக்கி விட்டது.
நண்பர் தேவநேயன்…
17 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்கு
சரடு பின்னியது
இவரது facebook
நன்றி நண்பா நன்றி…
வெட்டப்பட்ட மரத்தின் வேர்கள்
பாங்காய் மரத்தினை துளிர்க்க வைக்குமே
அதுபோல
துளிர்த்து விட்டோம்
ஒருமரத்தின் கிளைகளாய்.
எல்லாம் நான் பார்த்துகிறேன்…
என்று பொறுப்பெடுக்கும்
உனது குணம்
அப்படியே…
 நீ மாறவில்லை…
மாற்றம் தேவையில்லை.
உனது விருப்பப்படியே
தமிழியக்கங்களோடுள்ள
தொடர்புகளோடு
குரல் சந்திபில் இணைந்த நாம்
பிற நண்பர்களோடு
மீண்டும் ஒரு முக சந்திப்பில்
இணைவோம் என்ற நம்பிக்கையில்…





எம்.கே.பாந்தே காலமானார்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் எம்.கே. பாந்தே 2011, ஆகஸ்ட் 20 சனிக்கிழமை காலமானார்.

86 வயதான தோழர் பாந்தேவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளியன்று மாலை தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு: 

தோழர் பாந்தே அவர்களின் சுமார் எழுபதாண்டு கால பொதுவாழ்வு, அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே துவங்கிவிட்டது. அவர் இந்தியாவின் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் உன்னதத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். 1943இல் சோலாப்பூர் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். 1943இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப் பை முடித்தபின், அரசியல் மற்றும் பொருளாதாரத்திற் கான கோகலே இன்ஸ்டிட்யூட் டில் முனைவர் (டாக்டர்) பட்டத்தைப் பெற்றார்.

தோழர். பாந்தே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோலாப்பூர் நகரக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றார். பின் னர் அவர் கோவா விடுதலைப் போராட்டத்திலும் முன்னணி பங்கு வகித்தார்.

தொழிற்சங்க இயக்கத்திற்கு தோழர் பாந்தேயின் பங்களிப்பு மகத்தானதாகும். 1960களில் ஏஐடியுசி மையத்தில் செயலாளராகப் பணியாற்றிய தோழர் பாந்தே, சிஐடியுவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறி, உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கு அர்பணிப்புடனும் திறமையோடும் பணியாற்றினார்.1990இலிருந்து 1999 வரை சிஐடியுவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் 2010வரை அதன் தலைவராகவும் செயலாற்றினார். கடந்த முப்பதாண்டுகளில் நாட்டில் நடைபெற்ற பெரிய அளவிலான அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு, மத்திய தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையைக் கட்டுவதில் முக்கியமான பங்கினை வகித்தார்.

தன்னை மார்க்சிய-லெனினியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தோழர் பாந்தே உழைக்கும் வர்க்க இயக்கத்தை சோசலிசத் தத்துவத்துடன் பிணைத்திடவும், தொழிலாளர் வர்க்கம் சமூக மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தன்னுடைய புரட்சிகரப் பங்களிப்பினை உணரக்கூடிய விதத்திலும் அவர்களின் அரசியல் உணர்வினை உயர்த்துவதில் தொடர்ந்து விடாப்பிடியாக முயற்சித்து வந்தார்.

கட்சி 1964இல் பிரிந்த போது, திருத்தல்வாதத்திற்கு எதிராக உறுதியாக நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார் பாந்தே. தன்னுடைய புரட்சிகர வாழ்க்கையில் அவர் நாலரை ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் செலவிட்டார்.

1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகவும், பின்னர் 1998இல் நடைபெற்ற 16 ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் பாந்தே நாட்டில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வளர்த்தெடுத்திட தன் இறுதி மூச்சு வரை ஓய்வறி யாது உழைத்தார். அனைத்துத் தொழிற்சங்க அமைப்புத் தலை வர்களும் அவரிடம் அளவிடற்கரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர். எவ்விதமான சாதாரண தொழிலாளியிடமும் மிகவும் நேசத்துடன் பழகக் கூடிய தலைவராக இருந்தார். அவரது வாழ்க்கை மிகவும் எளிமையான ஒன்றாகும். தோழர் பாந்தேவின் மனைவி தோழர் பிரமிளா பாந்தே.

கார்த்திகேசு சிவதம்பி - மேலும் ஒரு குறிப்பு

தினமணி தமிழ்மணியின் கலாரசிகன் பகுதியில் 21-08-2011 அன்று வெளியான குறிப்பு.


அடேயப்பா என்று வியப்பில் சமைந்துவிட்டேன். இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளவில்லை.

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியைச் சந்திக்கவும், அவருடன் பேசிப் பழகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழிலக்கியம் பற்றிய அவரது கருத்துகள் பலவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது கோவையில் கடந்த ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. நான் வாழும் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழறிஞர் ஒருவருடன் பேசிப் பழகக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பிறவிப் பேறாகவே கருதுகிறேன்.
சமீபத்தில் காலமான அந்த இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு தமிழறிஞர் என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு உடையவர் என்பது ஓர் இன்ப அதிர்ச்சி. சினிமாவைப் பற்றிய ஆழங்கால்பட்ட தெளிவு அந்தத் தமிழறிஞருக்கு இருந்திருந்தது என்பது மட்டுமல்ல, சினிமாவின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவும் செய்திருக்கிறார்.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியிருக்கும் இந்த நூல், சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம், தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச் சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம், தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்துகின்றது.
""பிரபல நாவல்களைத் திரைப்படமாக எடுக்கும்பொழுது மூலநூலில் காணப்பட்ட சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்ற மரபு தமிழில் போற்றப்படவில்லை என்றே கூறவேண்டும். இதனால் அகிலன், ஜானகிராமன் போன்றோரது நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டபொழுதும் நாவலில் வந்த உரையாடல்கள் இடம்பெறவில்லை'' என்பதை முனைவர் சிவத்தம்பி வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். தமிழ்ப் படங்கள் படமாக்கப்படுகின்றபொழுது சினாரியோ பகுப்பு, அது படமாக்கப்படும் முறைமை, அவற்றில் சொல்லாடலின் ஆழம் பற்றிய நுணுக்கமான பார்வை மிகக் குறைவான இயக்குநர்களிடம்தான் காணப்படுகிறது என்பதும் முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
தனது புத்தகத்தில் முனைவர் சிவத்தம்பி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பதிவு சிந்திக்கத்தக்கது. சினிமா மாயை தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டுவது உண்மை. தமிழர்களின் சினிமா மாயையால் திரைப்பட உலகம் பயனடைந்திருக்கிறது. பலர் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவால் தமிழ் பயனடைந்திருக்கிறதா, தமிழ்ச் சமுதாயம் பயனடைந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறதே...
""தமிழ்நாட்டில் பண்பாட்டுக் கருவூலங்களைத் திரைப்பட வடிவில் கொண்டுவந்து உலகுக்குக் காட்டக்கூடிய எந்தவொரு சினிமாவும், குறிப்பாகச் சித்திரிப்பு சினிமா (ச்ங்ஹற்ன்ழ்ங் ச்ண்ப்ம்) இன்று எம்மிடத்தே இல்லை என்றே கூறவேண்டும்.
ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை வனப்புணர்வுடன் காட்டுவதாகக் கொள்ளமுடியாது. இச்சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரியச் சிற்பம், பரதம், நாட்டார் கலைகள் பற்றிய மிகச் சிறந்த உலகப் புகழ்பெற்ற ஆவணப் படங்கள் இல்லை எனலாம். பால சரஸ்வதியின் ஆடற்சிறப்பை சத்தியஜித்ரே காட்டியது போன்று நமது பரதக் கலைஞர்களையோ, இசைக் கலைஞர்களையோ, ஸ்தபதிகளையோ செம்மையான சித்திரிப்பு மூலம் காட்டும் ஆவணப்படங்கள் இதுவரை தமிழ்ச் சூழலில் தயாரிக்கப்பட்டுள்ளனவா எனும் வினா உண்டு.
தமிழ்ப் பண்பாட்டில் அனைத்திந்திய, உலக நிலைப்பட்ட முக்கியத்துவத்தினைக் காட்டும் ஒரு திரைப்படம்கூட இதுவரை இல்லை என்றே கூறவேண்டும். தில்லானா மோகனாம்பாள் படம் இத்தகைய தேவையைச் சிறிதும் பூர்த்தி செய்யாது'' - இது முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
"ஒரு கலைஞனின் மறைவும் கலையின் இழப்பும்' என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பதிவு செய்திருக்கும் சிவாஜிகணேசன் பற்றிய "அரங்கியல் குறிப்பு' அற்புதத்திலும் அற்புதம். அதேபோல, "திரைவளர்த்த கவிதை' என்ற தலைப்பில் திரைப்படப் பாடல்கள் பற்றிய அவரது ஆய்வும் பல புதிய கருத்துகளை முன்வைக்கிறது.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்பதற்குப் பதிலாக, "தமிழறிஞரின் பார்வையில் சினிமா' என்று தலைப்பு வைத்திருக்கலாமோ?

நட்புகளின் நடப்புகள்


என்றோ எங்கோ சந்தித்தோம்…
பகிர்ந்தோம்…
மகிழ்ந்தோம்…
ஏனென்று கேட்காமல்.
பின்னர்தான் பயிற்றுவிக்கப்பட்டோம்
ஏன்? எதற்கு? எனக் கேட்க...
நட்புகளை மறக்க...
கால ஓட்டத்தில் கரைய...
எல்லாமே மறந்து
கரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மீண்டும் ஒரு நாள்
தேடலாம்…
பிடுங்கியவர்களையல்ல
நட்பின் வேர்களை…

நட்பு


காற்றிடைப்பட்ட தூசுபோல
உழன்று மறைந்தாலும்…
மீண்டும் மீண்டும்
ஒன்று சேர்க்கிறது
நட்பு.

Monday, August 15, 2011

காதலின் நினைவு


கவிதைகள் வளரும் நாளில்
நீயும் நானும்…
இணைந்தும் பிரிந்தும்
இணைந்திருந்தோம்.
இப்போதும் உனை காணும்போது
நினைவுகளின் ஓரங்களில்
மீண்டு மறைகிறது
மறக்கடிக்கப் பட்டவை
நீயோ… நானோ…
யாரேனும் ஒருவர்
வாய் திறந்திருக்கலாம் தான்…
இப்போதும் அதே நேசத்தோடு
நெஞ்சங்கள் பதைக்கின்றன
இருவருக்கும்…
இணைந்திருந்தால் மட்டுமல்ல
நினைத்திருந்தாலும்
காதலில் வெற்றி தான்.

இணையத்தில் வாசித்த கவிதை


சாப்பிட்டேன் என
அம்மாவிடமும்
கவலைப்பட வில்லை என
அப்பாவிடமும்
அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன் என
அண்ணனிடமும்
முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது…
காலையிலிருந்து சாப்பிடல
ரொம்ப பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது….

Tuesday, June 14, 2011

தினமணியின் பார்ப்பன பாசம்


09-06-2011 அன்றைய தினமணி தலையங்கம்
குறிக்கோள் மாறக்கூடாது

காலாகாலமாக ஓர் அரசின் முதலாவது அடிப்படைக் கடமை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது. அதற்கு அடுத்தபடியாக, ஒரு நல்லரசின் அடையாளங்கள் அனைவருக்கும் தரமான கல்வியையும், முறையான சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவது.
சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை.
அனைத்துத் தரப்புக் குழந்தைகளையும் ஒரே வகுப்பறைக்குள் அமரச் செய்து, சாதி மத பேதமின்றி ஒன்றாகப் படிப்பித்து, ஓடி விளையாடிப் பழக வைத்த அந்த தீர்க்கதரிசியின் கனவுதான் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பும், அதன்மூலம் அகற்றப்படும் சமூக ஏற்றத்தாழ்வும்! குறைந்தது பத்தாம் வகுப்புவரை அல்லது பிளஸ் டூ வகுப்புவரை அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே தரத்திலான கல்வியும், ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல், சாதிமத பேதங்களை மறந்து கள்ளங்கபடமற்ற குழந்தைகள் ஒன்றாகக் கலந்து பழகும் வாய்ப்பையும் அளிப்பதுதான் நாளைய தலைமுறையின் ஒற்றுமைக்கும், ஏற்றத்தாழ்வின்மைக்கும், ஏன், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் ஒரே வழி.
இன்றைய நிலையில், நாம் இரண்டு வகையிலான குழந்தைகளை நமது கல்விச் சாலைகளின் மூலம் உருவாக்கி வருகிறோம். மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளில், ஏழ்மை, வறுமை என்பதே தெரியாத, கோக கோலா, காட்பரீஸ் சாக்லேட் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள் ஒருபுறம். அரசுப் பள்ளிகளில் அரைவயிற்றுக் கஞ்சியுடன் மதிய உணவை எதிர்பார்த்து, வறுமையை வரித்துக் கொண்ட குழந்தைகள் இன்னொரு புறம்.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்வி தனியார் மயமாக்கப்பட்டதுபோல ஏன் இங்கேயும் ஆக்கப்படக்கூடாது என்கிற விபரீத எண்ணம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டதன் விளைவுதான் இப்போது கல்வி என்பது தர்மமாக இருந்ததுபோய் வியாபாரமாக மாறிவிட்டிருக்கிறது. தங்களது சொத்து சுகத்தை எல்லாம் அடுத்த தலைமுறையினரின் அறிவுக்கண்களைத் திறந்து வைப்பதற்காகக் கல்விச் சாலைகளை அமைக்க தானமளித்த ராஜா.சர். அண்ணாமலைச் செட்டியார், பென்னாத்தூர் சிவசாமி அய்யர், அவிநாசிலிங்கம் செட்டியார், கலவல கண்ணன் செட்டியார், செங்கல்வராய நாயக்கர், கருமுத்து தியாகராஜ செட்டியார், வள்ளல் அழகப்பச் செட்டியார் போன்றவர்களைக் கல்வித் தந்தை என்று அழைத்த அதே வாயால், கல்விச் சாலைகளின் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுபவர்களையும் கல்வித் தந்தை என்று அழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்பது தனியார் பள்ளிகள் காளான்களாக முளைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பல அரசுப் பள்ளிகளில், அரசு ஊழியர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கே செல்லாமல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, தங்களுக்குப் பதிலாக வேலையில்லாப் பட்டதாரிகளைப் பாடமெடுக்க வைக்கும் அவலம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைக் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டிக்க வேண்டிய பள்ளிக் கல்வித் துறையும் அதை வேடிக்கை பார்க்கும் அவலம் தொடரத்தான் செய்கிறது.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளிக் கல்வியை முழுமையாக அரசே ஏற்று நடத்தி, முறையான ஆசிரியர்களை நியமிப்பதுடன் அவர்களை நெறிப்படுத்தி, தரமற்றவர்களை புல்பூண்டுகளைப் பறித்து எறிவதுபோல அகற்றி, ஏழை பாழைகளுக்கும் நல்ல கல்வி என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதன் முதல்படியாக, சமச்சீரான கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நீண்டநாள் கோரிக்கை.
                சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.
பள்ளிப் பாடப் புத்தகங்களில், அதாவது மொழிப்பாட நூல்களிலும், சரித்திரப் பாடத்திலும் அரை நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட படைப்புகளையும், தலைவர்களையும் பற்றி மட்டும்தான் குறிப்புகள் இடம்பெற வேண்டும் என்கிற இலக்கணம் வகுக்கப்பட வேண்டும். அரை நூற்றாண்டு காலம்கூட மக்கள் மனதில் நிலைபெறாத தலைவர்களைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. அப்படிச் செய்தால், தேவையில்லாத ஒருவரை நாயகர்களாக நாம் வலியத் திணிக்கிறோம் என்று பொருள்.
சமச்சீர் கல்விகளில் குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்துவதுதான் நோக்கம். அந்தத் திட்டத்தைத் தள்ளி வைக்கிறோமே தவிர, கைவிடவில்லைஎன்கிற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சட்டப்பேரவை உறுதிமொழியை வரவேற்கிறோம்.
முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகத் திட்டத்தையே நிறுத்துவது தவறு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தொட்டியில் பச்சிளம் குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு, தண்ணீரைக் கொட்டும்போது குழந்தையுடன் தூக்கிக் கொட்டுவது'' என்பதுதான் அது. அந்தக் கதை சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தள்ளிப் போடலாம். தாமதமாகலாம். ஆனால், சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட்டு விடக்கூடாது. உறுதியாக நிறைவேற்றப்பட்டே தீரவேண்டும்.

மேற்கண்ட தினமணி தலையங்கத்திற்கு 11-06-2011 தேதியிட்ட விடுதலை இதழில் வெளிவந்த விமர்சனம்…

தினமணி தலையங்கத்தின்படி திராவிட இயக்கத்தின் சுயமரியாதைப் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் களையப்படுவதற்குத் தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களாம் திராவிட இயக்கத்தினர்.
தினமணி ஆசிரியர் தொடக்கத்தில் அரசல் புரசலாக ஒளிந்திருந்த ஆர்.எஸ்.எஸ் புத்தியை, பார்பன நரித்தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது தன் பூணூல் கோத்தரத்தை துக்ளக்  ஏட்டில் திருவாளர் சோ ராமசாமி அய்யரால் மனுதர்ம சல்லடையில் சலித்து எடுக்கப்பட்ட பேர்வழி என்பதை மிக வெளிப்படையாகவே சட்டைக்கு உள்ளிருந்த பூணூலை சட்டைக்கு வெளியே தூக்கி போட்டுக் கொண்டு திமிராகத் திரிகிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த தலையங்கம்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் திராவிட இயக்கத்தையும் காமராசரையும் மோதவிடும் நரித்தந்திரம் தான்.
காமராசர் பச்சைத் தமிழராக, கல்வி வள்ளல் காமராசராக சொல்லப்படுவது விளக்கப்படுவது எந்த அடிப்படையில்? கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடன்  எழுதியதற்கு என்ன பொருள்?
காமராசர்  பற்றிக் குறிப்பிடும்போது குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்து 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி நேரம் அப்பன் தொழிலை பிள்ளைச் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாரே – ஆச்சாரியார் ராஜாஜி அதனையும் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே – அதனைக் குறிப்பிட்டு இருந்தால்தானே காமராசர் பச்சைத்தமிழர் கல்வி வள்ளல் ஆன வரலாற்றின் பின்னணி உண்மையானதாக இருக்க முடியும்?
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்படுவதற்கு யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா – திராவிடர் இயக்கம் அல்லவா!
ஆச்சாரியரைப் பதவியை விட்டு விரட்டிய சூழலில் காமராசர் முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தது அதற்கு துணிவு கொடுத்தது – மக்கள் மத்தியில் அவரைக் கொண்டு சென்றது யார்? இயக்கம் எது?
கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கல்கியே ஒப்புக் கொண்ட பிறகு இந்த வைத்தியநாதய்யர்கள் யாவர்? அந்தக் காலகட்டத்தில் டவுசர் போட்டிருந்தாரோ என்னவோ!
மதிய உணவுத் திட்டம் காமராசர் காலத்தில் மட்டுமல்ல – நீதிக்கட்சித் தலைவர் பி.தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நீதித் திட்டம் என்ற வரலாறு தினமணி களுக்குத் தெரியுமா?
காமராசரை இந்த தினமணிக் கூட்டம் எப்படியெல்லாம் கரித்துக் கொட்டியது என்பது நமக்குத் தெரியாதா? தமிழர்கள் அறிய மாட்டார்களா?
காமராசரால் கல்வி வளர்ச்சி பெற்றது ஏற்றத்தாழ்வு போக்கப்பட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்தக் கூட்டம் இலவசக் கல்வி கொடுத்ததாலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாலும் தகுதி – திறமை கெட்டுப் போய் விட்டது என்று கூச்சலிடவில்லையா?
அந்த நேரத்தில் இந்த பார்ப்பனக் கூட்டத்தைப் பார்த்து காமராசர் எழுப்பிய வினாக்கள் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கின்றனவே!
பறையனை படிக்க வச்சேன் எஞ்சினீயர்  ஆனான். எந்த பாலம் இடிந்தது சொல்.
பறையனை படிக்க வச்சேன். டாக்டர் ஆனான். அவன் ஊசிப் போட்டு எந்தப் பிள்ளை செத்தது சொல்.
உன் தகுதியும் தெரியும். திறமையும் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே அழித்து விடுவேன் – ஜாக்கிரதை –என்று காமராசர் சங்கநாதம் செய்தாரே – ஞாபகம் இருக்கிறதா?
இது யார் பேச்சு? பெரியார் பேச்சா? என்று விடுதலை தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டதெல்லாம் தெரியுமா – தினமணி திருநூல்களுக்கு?
திமுக ஆட்சி போய்விட்டது. அதிமுக ஆட்சி வந்து விட்டது. இனி ஆனந்தராகம் தான் நமக்கு – அவாள் கூடாரத்துக்குள்ளேயே ஒட்டகம் நுழைந்து விட்டது . திராவிடர் இயக்கத்துக்குள் ஊடுருவல் நடந்து விட்டது. புத்த மார்க்கத்தைத் தீர்த்துக் கட்டியது போல் நீர்த்துப் போகச் செய்து விடலாம் என்று கணக்குப் போடுவதாக தெரிகிறது – பூணூல் வளையம் பலமாக வைக்கப்படுகிறது.
உண்மையான திராவிடர் இயக்கங்களுக்கு உண்மையாகவே வேலை அதிமாகிவிட்டது. எச்சரிக்கைகளும் அதிமாகி விட்டன.
விழிப்பாக இருப்போம். வெப்பமாகத் தகிப்போம்!
நமது பேராயுதமான விடுதலையும் வெளியீடுகளும் தமிழர்களின் வீட்டுக்கு வீடு போய் சேர்ந்தாக வேண்டும். வீரர்களே தயாராவீர்! தயாராவீர்

Wednesday, June 8, 2011

ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி

சமீபத்தில் படித்து முடித்த நூல் "ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி" என்ற சுய அனுபவ பகிர்வு நூல்.
இதில் கன்னியர் மடத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூலை ஒரு சிறந்த அனுபவ பகிர்வு நூலாக கருதலாம். கன்னியர் மடத்தில் நடக்கும் அதிகார போட்டியோடு கூடிய வேறுபட்ட ஆளுமைகள். அவற்றில் சிக்கித்தவிக்கும் சிஸ்டர்கள். கருத்து சுதந்திரம் சிறிதும் இ்ல்லாது சீனியர்களுக்கு அடிபணிய வேண்டிய அவல நிலை. பாலியல் ரீதியாகக் கூட சீனியர்களுக்கு இணங்கி போக வேண்டிய நிலைகள். பணியிடத்தில் பழி வாங்க கையாளும் மூன்றாந்தர அணுகுமுறைகள்.......
இறுதியாக அதிகார போட்டியில் மன நோயாளியாக மாற்ற முயலும் கொடுமைகள்.....
என நல்லதொரு அனுபவ பகிர்வு நூலாக இதனைக் கருதலாம். மடங்களுக்குள் நடக்கும் கொடுமைகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த சிஸ்டர் ஜெஸ்மி உண்மையிலே பாராட்டப்பட வேண்டியவர்.

Friday, May 27, 2011

தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி



தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறந்த சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறும் 14-வது ஆண்டு நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியை ஒட்டி, தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்திவருகிறது.

விதிமுறைகள்
Ø  சிறுகதைகள் தமிழனின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
Ø  சிறுகதைகள் தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Ø  சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகாதவையாகவும் சொந்தக் கற்பனையில் உருவானவையாக இருப்பதோடு அதற்கான உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
Ø  கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம்.
Ø  ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம்.
Ø  போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
Ø  கடைசி தேதி ஜூன் மாதம் 4-ம் தேதி.
Ø  போட்டி முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் பிரசுரிக்கப்படும்.
Ø  போட்டி தொடர்பாக கடிதப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்.
முதல் பரிசு ரூ.10,000
2-ம் பரிசு ரூ.5,000
3-ம் பரிசு ரூ.2,500
5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி
தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி-2011-சிறுகதைப் போட்டி,
தினமணி நாளிதழ்,
எண்-29, 2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை-600058.