09-06-2011 அன்றைய தினமணி தலையங்கம்
குறிக்கோள் மாறக்கூடாது
குறிக்கோள் மாறக்கூடாது
காலாகாலமாக ஓர் அரசின் முதலாவது அடிப்படைக் கடமை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது. அதற்கு அடுத்தபடியாக, ஒரு நல்லரசின் அடையாளங்கள் அனைவருக்கும் தரமான கல்வியையும், முறையான சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவது.
சாதிபேதங்களைக் களைந்து, மதவேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம் சமூகநீதிப் பிரசாரமும், பகுத்தறிவு வாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் சாதி மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு அகற்றியதன் அடிப்படைக் காரணம் பெருந்தலைவர் காமராஜின் கட்டாயக் கல்வித் திட்டமும் அந்தத் திட்டம் வெற்றிபெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும்தான் என்பதே பேசப்படாத நிதர்சன உண்மை.
அனைத்துத் தரப்புக் குழந்தைகளையும் ஒரே வகுப்பறைக்குள் அமரச் செய்து, சாதி மத பேதமின்றி ஒன்றாகப் படிப்பித்து, ஓடி விளையாடிப் பழக வைத்த அந்த தீர்க்கதரிசியின் கனவுதான் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பும், அதன்மூலம் அகற்றப்படும் சமூக ஏற்றத்தாழ்வும்! குறைந்தது பத்தாம் வகுப்புவரை அல்லது பிளஸ் டூ வகுப்புவரை அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே தரத்திலான கல்வியும், ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல், சாதிமத பேதங்களை மறந்து கள்ளங்கபடமற்ற குழந்தைகள் ஒன்றாகக் கலந்து பழகும் வாய்ப்பையும் அளிப்பதுதான் நாளைய தலைமுறையின் ஒற்றுமைக்கும், ஏற்றத்தாழ்வின்மைக்கும், ஏன், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் ஒரே வழி.
இன்றைய நிலையில், நாம் இரண்டு வகையிலான குழந்தைகளை நமது கல்விச் சாலைகளின் மூலம் உருவாக்கி வருகிறோம். மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளில், ஏழ்மை, வறுமை என்பதே தெரியாத, கோக கோலா, காட்பரீஸ் சாக்லேட் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள் ஒருபுறம். அரசுப் பள்ளிகளில் அரைவயிற்றுக் கஞ்சியுடன் மதிய உணவை எதிர்பார்த்து, வறுமையை வரித்துக் கொண்ட குழந்தைகள் இன்னொரு புறம்.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்வி தனியார் மயமாக்கப்பட்டதுபோல ஏன் இங்கேயும் ஆக்கப்படக்கூடாது என்கிற விபரீத எண்ணம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டதன் விளைவுதான் இப்போது கல்வி என்பது தர்மமாக இருந்ததுபோய் வியாபாரமாக மாறிவிட்டிருக்கிறது. தங்களது சொத்து சுகத்தை எல்லாம் அடுத்த தலைமுறையினரின் அறிவுக்கண்களைத் திறந்து வைப்பதற்காகக் கல்விச் சாலைகளை அமைக்க தானமளித்த ராஜா.சர். அண்ணாமலைச் செட்டியார், பென்னாத்தூர் சிவசாமி அய்யர், அவிநாசிலிங்கம் செட்டியார், கலவல கண்ணன் செட்டியார், செங்கல்வராய நாயக்கர், கருமுத்து தியாகராஜ செட்டியார், வள்ளல் அழகப்பச் செட்டியார் போன்றவர்களைக் கல்வித் தந்தை என்று அழைத்த அதே வாயால், கல்விச் சாலைகளின் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுபவர்களையும் கல்வித் தந்தை என்று அழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்பது தனியார் பள்ளிகள் காளான்களாக முளைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பல அரசுப் பள்ளிகளில், அரசு ஊழியர்களாக இருக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கே செல்லாமல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, தங்களுக்குப் பதிலாக வேலையில்லாப் பட்டதாரிகளைப் பாடமெடுக்க வைக்கும் அவலம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைக் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டிக்க வேண்டிய பள்ளிக் கல்வித் துறையும் அதை வேடிக்கை பார்க்கும் அவலம் தொடரத்தான் செய்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளிக் கல்வியை முழுமையாக அரசே ஏற்று நடத்தி, முறையான ஆசிரியர்களை நியமிப்பதுடன் அவர்களை நெறிப்படுத்தி, தரமற்றவர்களை புல்பூண்டுகளைப் பறித்து எறிவதுபோல அகற்றி, ஏழை பாழைகளுக்கும் நல்ல கல்வி என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதன் முதல்படியாக, சமச்சீரான கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நீண்டநாள் கோரிக்கை.
சமச்சீர் கல்வி என்கிற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவு வாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும் தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி.
பள்ளிப் பாடப் புத்தகங்களில், அதாவது மொழிப்பாட நூல்களிலும், சரித்திரப் பாடத்திலும் அரை நூற்றாண்டு காலத்துக்கு முற்பட்ட படைப்புகளையும், தலைவர்களையும் பற்றி மட்டும்தான் குறிப்புகள் இடம்பெற வேண்டும் என்கிற இலக்கணம் வகுக்கப்பட வேண்டும். அரை நூற்றாண்டு காலம்கூட மக்கள் மனதில் நிலைபெறாத தலைவர்களைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. அப்படிச் செய்தால், தேவையில்லாத ஒருவரை நாயகர்களாக நாம் வலியத் திணிக்கிறோம் என்று பொருள்.
“சமச்சீர் கல்விகளில் குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்துவதுதான் நோக்கம். அந்தத் திட்டத்தைத் தள்ளி வைக்கிறோமே தவிர, கைவிடவில்லை” என்கிற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சட்டப்பேரவை உறுதிமொழியை வரவேற்கிறோம்.
முந்தைய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகத் திட்டத்தையே நிறுத்துவது தவறு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. தொட்டியில் பச்சிளம் குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டு, தண்ணீரைக் கொட்டும்போது குழந்தையுடன் தூக்கிக் கொட்டுவது'' என்பதுதான் அது. அந்தக் கதை சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தள்ளிப் போடலாம். தாமதமாகலாம். ஆனால், சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட்டு விடக்கூடாது. உறுதியாக நிறைவேற்றப்பட்டே தீரவேண்டும்.
மேற்கண்ட தினமணி தலையங்கத்திற்கு 11-06-2011 தேதியிட்ட விடுதலை இதழில் வெளிவந்த விமர்சனம்…
தினமணி தலையங்கத்தின்படி திராவிட இயக்கத்தின் சுயமரியாதைப் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் களையப்படுவதற்குத் தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களாம் திராவிட இயக்கத்தினர்.
தினமணி ஆசிரியர் தொடக்கத்தில் அரசல் புரசலாக ஒளிந்திருந்த ஆர்.எஸ்.எஸ் புத்தியை, பார்பன நரித்தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது தன் பூணூல் கோத்தரத்தை துக்ளக் ஏட்டில் திருவாளர் சோ ராமசாமி அய்யரால் மனுதர்ம சல்லடையில் சலித்து எடுக்கப்பட்ட பேர்வழி என்பதை மிக வெளிப்படையாகவே சட்டைக்கு உள்ளிருந்த பூணூலை சட்டைக்கு வெளியே தூக்கி போட்டுக் கொண்டு திமிராகத் திரிகிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த தலையங்கம்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் திராவிட இயக்கத்தையும் காமராசரையும் மோதவிடும் நரித்தந்திரம் தான்.
காமராசர் பச்சைத் தமிழராக, கல்வி வள்ளல் காமராசராக சொல்லப்படுவது விளக்கப்படுவது எந்த அடிப்படையில்? கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடன் எழுதியதற்கு என்ன பொருள்?
காமராசர் பற்றிக் குறிப்பிடும்போது குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்து 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி நேரம் அப்பன் தொழிலை பிள்ளைச் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாரே – ஆச்சாரியார் ராஜாஜி அதனையும் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே – அதனைக் குறிப்பிட்டு இருந்தால்தானே காமராசர் பச்சைத்தமிழர் கல்வி வள்ளல் ஆன வரலாற்றின் பின்னணி உண்மையானதாக இருக்க முடியும்?
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்படுவதற்கு யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா – திராவிடர் இயக்கம் அல்லவா!
ஆச்சாரியரைப் பதவியை விட்டு விரட்டிய சூழலில் காமராசர் முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தது அதற்கு துணிவு கொடுத்தது – மக்கள் மத்தியில் அவரைக் கொண்டு சென்றது யார்? இயக்கம் எது?
கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கல்கியே ஒப்புக் கொண்ட பிறகு இந்த வைத்தியநாதய்யர்கள் யாவர்? அந்தக் காலகட்டத்தில் டவுசர் போட்டிருந்தாரோ என்னவோ!
மதிய உணவுத் திட்டம் காமராசர் காலத்தில் மட்டுமல்ல – நீதிக்கட்சித் தலைவர் பி.தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நீதித் திட்டம் என்ற வரலாறு தினமணி களுக்குத் தெரியுமா?
காமராசரை இந்த தினமணிக் கூட்டம் எப்படியெல்லாம் கரித்துக் கொட்டியது என்பது நமக்குத் தெரியாதா? தமிழர்கள் அறிய மாட்டார்களா?
காமராசரால் கல்வி வளர்ச்சி பெற்றது ஏற்றத்தாழ்வு போக்கப்பட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்தக் கூட்டம் இலவசக் கல்வி கொடுத்ததாலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாலும் தகுதி – திறமை கெட்டுப் போய் விட்டது என்று கூச்சலிடவில்லையா?
அந்த நேரத்தில் இந்த பார்ப்பனக் கூட்டத்தைப் பார்த்து காமராசர் எழுப்பிய வினாக்கள் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கின்றனவே!
பறையனை படிக்க வச்சேன் எஞ்சினீயர் ஆனான். எந்த பாலம் இடிந்தது சொல்.
பறையனை படிக்க வச்சேன். டாக்டர் ஆனான். அவன் ஊசிப் போட்டு எந்தப் பிள்ளை செத்தது சொல்.
உன் தகுதியும் தெரியும். திறமையும் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே அழித்து விடுவேன் – ஜாக்கிரதை –என்று காமராசர் சங்கநாதம் செய்தாரே – ஞாபகம் இருக்கிறதா?
இது யார் பேச்சு? பெரியார் பேச்சா? என்று விடுதலை தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டதெல்லாம் தெரியுமா – தினமணி திருநூல்களுக்கு?
திமுக ஆட்சி போய்விட்டது. அதிமுக ஆட்சி வந்து விட்டது. இனி ஆனந்தராகம் தான் நமக்கு – அவாள் கூடாரத்துக்குள்ளேயே ஒட்டகம் நுழைந்து விட்டது . திராவிடர் இயக்கத்துக்குள் ஊடுருவல் நடந்து விட்டது. புத்த மார்க்கத்தைத் தீர்த்துக் கட்டியது போல் நீர்த்துப் போகச் செய்து விடலாம் என்று கணக்குப் போடுவதாக தெரிகிறது – பூணூல் வளையம் பலமாக வைக்கப்படுகிறது.
உண்மையான திராவிடர் இயக்கங்களுக்கு உண்மையாகவே வேலை அதிமாகிவிட்டது. எச்சரிக்கைகளும் அதிமாகி விட்டன.
விழிப்பாக இருப்போம். வெப்பமாகத் தகிப்போம்!
நமது பேராயுதமான விடுதலையும் வெளியீடுகளும் தமிழர்களின் வீட்டுக்கு வீடு போய் சேர்ந்தாக வேண்டும். வீரர்களே தயாராவீர்! தயாராவீர்‼
No comments:
Post a Comment