Saturday, August 20, 2011

மீண்ட தொடர்புகள்….


1992 ஜூலை முதல் 1994 மே வரையிலான காலகட்டம்…
வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு வருடங்கள்…
உறவுகள் வீணடித்ததாகக் கூறினாலும்
மனம் ஒப்புகொள்ள மறுக்கிறது.
நட்புகளின் ஆழங்கள் குறித்த தேடல்கள்
இன்றும் தொடர்வதால்
வீணல்ல அந்த வருடங்கள்
சம்பாத்தியங்கள்.
வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய வருடங்கள்…
நண்பர் பால்ராஜ்…
இனிய அப்பழுகற்ற நட்புக்கு இலக்கணமானவர்
நிறைய சாதிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்
சினிமா துறையை பற்றிய
அனைத்து வினாக்களுக்கும் அவரிடம் விடையுண்டு
அவருள் இருந்த நல்ல ஒரு படைப்பாளியை…
வல்லுநரை….
சமூக பார்வையாளராக மாற்றத் தவறிய
அவரது பெற்றோர் மீது…
சமூகத்தின் மீது…
எப்போதும் எனக்கு வருத்தம் உண்டு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு - நேற்று
ஒரு துடிப்பான தொடர்பு
என்ன மச்சான்…. எப்படிடா இருக்க….
என்ற குரல் கேட்டபோது எந்த மிகையுமில்லாமல்
கண்கள் பனித்தன.
இப்போது ஆசிரியர் பணி என்று அப்போதுதான் அறிந்தேன்
மகிழ்ச்சிதான்
ஆனால் ஒரு படைப்பாளியை இழந்த வருத்தம்
இப்போதும்.
நண்பர் சுரேஷ்…..
என்ன ஒரு திறமை என வியக்க வைத்த சுரேஷ்
நடனம்…
விளையாட்டு…
இசையின் மீதான ஆர்வம்…
எப்போதும் சிரிப்போடு இருக்கும் முகம்…
மச்சி புதிய ஜட்டி வாங்கியிருக்கேன்…
பார்ட்டிக்கு மறக்காமல் வந்திடு
என அழைக்கும் அவரது துள்ளல் பேச்சு
சினிமா துறையில் சாதிப்பேன்
என்ற அவரது பேச்சு கனவாகி போயிருக்கிறது
வங்கி பணியோடு வாழ்க்கையில்
திருப்திகொள்ள பழகி விட்டார்
இல்லை
இந்த சமூகம் பழக்கி விட்டது.
நண்பர் தேவநேயன்…
17 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்கு
சரடு பின்னியது
இவரது facebook
நன்றி நண்பா நன்றி…
வெட்டப்பட்ட மரத்தின் வேர்கள்
பாங்காய் மரத்தினை துளிர்க்க வைக்குமே
அதுபோல
துளிர்த்து விட்டோம்
ஒருமரத்தின் கிளைகளாய்.
எல்லாம் நான் பார்த்துகிறேன்…
என்று பொறுப்பெடுக்கும்
உனது குணம்
அப்படியே…
 நீ மாறவில்லை…
மாற்றம் தேவையில்லை.
உனது விருப்பப்படியே
தமிழியக்கங்களோடுள்ள
தொடர்புகளோடு
குரல் சந்திபில் இணைந்த நாம்
பிற நண்பர்களோடு
மீண்டும் ஒரு முக சந்திப்பில்
இணைவோம் என்ற நம்பிக்கையில்…





எம்.கே.பாந்தே காலமானார்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் எம்.கே. பாந்தே 2011, ஆகஸ்ட் 20 சனிக்கிழமை காலமானார்.

86 வயதான தோழர் பாந்தேவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளியன்று மாலை தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் காலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு: 

தோழர் பாந்தே அவர்களின் சுமார் எழுபதாண்டு கால பொதுவாழ்வு, அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே துவங்கிவிட்டது. அவர் இந்தியாவின் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் உன்னதத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். 1943இல் சோலாப்பூர் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். 1943இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப் பை முடித்தபின், அரசியல் மற்றும் பொருளாதாரத்திற் கான கோகலே இன்ஸ்டிட்யூட் டில் முனைவர் (டாக்டர்) பட்டத்தைப் பெற்றார்.

தோழர். பாந்தே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோலாப்பூர் நகரக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்றார். பின் னர் அவர் கோவா விடுதலைப் போராட்டத்திலும் முன்னணி பங்கு வகித்தார்.

தொழிற்சங்க இயக்கத்திற்கு தோழர் பாந்தேயின் பங்களிப்பு மகத்தானதாகும். 1960களில் ஏஐடியுசி மையத்தில் செயலாளராகப் பணியாற்றிய தோழர் பாந்தே, சிஐடியுவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறி, உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கு அர்பணிப்புடனும் திறமையோடும் பணியாற்றினார்.1990இலிருந்து 1999 வரை சிஐடியுவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் 2010வரை அதன் தலைவராகவும் செயலாற்றினார். கடந்த முப்பதாண்டுகளில் நாட்டில் நடைபெற்ற பெரிய அளவிலான அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு, மத்திய தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையைக் கட்டுவதில் முக்கியமான பங்கினை வகித்தார்.

தன்னை மார்க்சிய-லெனினியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தோழர் பாந்தே உழைக்கும் வர்க்க இயக்கத்தை சோசலிசத் தத்துவத்துடன் பிணைத்திடவும், தொழிலாளர் வர்க்கம் சமூக மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய தன்னுடைய புரட்சிகரப் பங்களிப்பினை உணரக்கூடிய விதத்திலும் அவர்களின் அரசியல் உணர்வினை உயர்த்துவதில் தொடர்ந்து விடாப்பிடியாக முயற்சித்து வந்தார்.

கட்சி 1964இல் பிரிந்த போது, திருத்தல்வாதத்திற்கு எதிராக உறுதியாக நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார் பாந்தே. தன்னுடைய புரட்சிகர வாழ்க்கையில் அவர் நாலரை ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையில் செலவிட்டார்.

1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகவும், பின்னர் 1998இல் நடைபெற்ற 16 ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் பாந்தே நாட்டில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வளர்த்தெடுத்திட தன் இறுதி மூச்சு வரை ஓய்வறி யாது உழைத்தார். அனைத்துத் தொழிற்சங்க அமைப்புத் தலை வர்களும் அவரிடம் அளவிடற்கரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர். எவ்விதமான சாதாரண தொழிலாளியிடமும் மிகவும் நேசத்துடன் பழகக் கூடிய தலைவராக இருந்தார். அவரது வாழ்க்கை மிகவும் எளிமையான ஒன்றாகும். தோழர் பாந்தேவின் மனைவி தோழர் பிரமிளா பாந்தே.

கார்த்திகேசு சிவதம்பி - மேலும் ஒரு குறிப்பு

தினமணி தமிழ்மணியின் கலாரசிகன் பகுதியில் 21-08-2011 அன்று வெளியான குறிப்பு.


அடேயப்பா என்று வியப்பில் சமைந்துவிட்டேன். இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளவில்லை.

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியைச் சந்திக்கவும், அவருடன் பேசிப் பழகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழிலக்கியம் பற்றிய அவரது கருத்துகள் பலவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது கோவையில் கடந்த ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. நான் வாழும் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழறிஞர் ஒருவருடன் பேசிப் பழகக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பிறவிப் பேறாகவே கருதுகிறேன்.
சமீபத்தில் காலமான அந்த இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு தமிழறிஞர் என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு உடையவர் என்பது ஓர் இன்ப அதிர்ச்சி. சினிமாவைப் பற்றிய ஆழங்கால்பட்ட தெளிவு அந்தத் தமிழறிஞருக்கு இருந்திருந்தது என்பது மட்டுமல்ல, சினிமாவின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவும் செய்திருக்கிறார்.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியிருக்கும் இந்த நூல், சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம், தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச் சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம், தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்துகின்றது.
""பிரபல நாவல்களைத் திரைப்படமாக எடுக்கும்பொழுது மூலநூலில் காணப்பட்ட சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்ற மரபு தமிழில் போற்றப்படவில்லை என்றே கூறவேண்டும். இதனால் அகிலன், ஜானகிராமன் போன்றோரது நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டபொழுதும் நாவலில் வந்த உரையாடல்கள் இடம்பெறவில்லை'' என்பதை முனைவர் சிவத்தம்பி வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். தமிழ்ப் படங்கள் படமாக்கப்படுகின்றபொழுது சினாரியோ பகுப்பு, அது படமாக்கப்படும் முறைமை, அவற்றில் சொல்லாடலின் ஆழம் பற்றிய நுணுக்கமான பார்வை மிகக் குறைவான இயக்குநர்களிடம்தான் காணப்படுகிறது என்பதும் முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
தனது புத்தகத்தில் முனைவர் சிவத்தம்பி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பதிவு சிந்திக்கத்தக்கது. சினிமா மாயை தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டுவது உண்மை. தமிழர்களின் சினிமா மாயையால் திரைப்பட உலகம் பயனடைந்திருக்கிறது. பலர் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவால் தமிழ் பயனடைந்திருக்கிறதா, தமிழ்ச் சமுதாயம் பயனடைந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறதே...
""தமிழ்நாட்டில் பண்பாட்டுக் கருவூலங்களைத் திரைப்பட வடிவில் கொண்டுவந்து உலகுக்குக் காட்டக்கூடிய எந்தவொரு சினிமாவும், குறிப்பாகச் சித்திரிப்பு சினிமா (ச்ங்ஹற்ன்ழ்ங் ச்ண்ப்ம்) இன்று எம்மிடத்தே இல்லை என்றே கூறவேண்டும்.
ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை வனப்புணர்வுடன் காட்டுவதாகக் கொள்ளமுடியாது. இச்சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரியச் சிற்பம், பரதம், நாட்டார் கலைகள் பற்றிய மிகச் சிறந்த உலகப் புகழ்பெற்ற ஆவணப் படங்கள் இல்லை எனலாம். பால சரஸ்வதியின் ஆடற்சிறப்பை சத்தியஜித்ரே காட்டியது போன்று நமது பரதக் கலைஞர்களையோ, இசைக் கலைஞர்களையோ, ஸ்தபதிகளையோ செம்மையான சித்திரிப்பு மூலம் காட்டும் ஆவணப்படங்கள் இதுவரை தமிழ்ச் சூழலில் தயாரிக்கப்பட்டுள்ளனவா எனும் வினா உண்டு.
தமிழ்ப் பண்பாட்டில் அனைத்திந்திய, உலக நிலைப்பட்ட முக்கியத்துவத்தினைக் காட்டும் ஒரு திரைப்படம்கூட இதுவரை இல்லை என்றே கூறவேண்டும். தில்லானா மோகனாம்பாள் படம் இத்தகைய தேவையைச் சிறிதும் பூர்த்தி செய்யாது'' - இது முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
"ஒரு கலைஞனின் மறைவும் கலையின் இழப்பும்' என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பதிவு செய்திருக்கும் சிவாஜிகணேசன் பற்றிய "அரங்கியல் குறிப்பு' அற்புதத்திலும் அற்புதம். அதேபோல, "திரைவளர்த்த கவிதை' என்ற தலைப்பில் திரைப்படப் பாடல்கள் பற்றிய அவரது ஆய்வும் பல புதிய கருத்துகளை முன்வைக்கிறது.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்பதற்குப் பதிலாக, "தமிழறிஞரின் பார்வையில் சினிமா' என்று தலைப்பு வைத்திருக்கலாமோ?

நட்புகளின் நடப்புகள்


என்றோ எங்கோ சந்தித்தோம்…
பகிர்ந்தோம்…
மகிழ்ந்தோம்…
ஏனென்று கேட்காமல்.
பின்னர்தான் பயிற்றுவிக்கப்பட்டோம்
ஏன்? எதற்கு? எனக் கேட்க...
நட்புகளை மறக்க...
கால ஓட்டத்தில் கரைய...
எல்லாமே மறந்து
கரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மீண்டும் ஒரு நாள்
தேடலாம்…
பிடுங்கியவர்களையல்ல
நட்பின் வேர்களை…

நட்பு


காற்றிடைப்பட்ட தூசுபோல
உழன்று மறைந்தாலும்…
மீண்டும் மீண்டும்
ஒன்று சேர்க்கிறது
நட்பு.

Monday, August 15, 2011

காதலின் நினைவு


கவிதைகள் வளரும் நாளில்
நீயும் நானும்…
இணைந்தும் பிரிந்தும்
இணைந்திருந்தோம்.
இப்போதும் உனை காணும்போது
நினைவுகளின் ஓரங்களில்
மீண்டு மறைகிறது
மறக்கடிக்கப் பட்டவை
நீயோ… நானோ…
யாரேனும் ஒருவர்
வாய் திறந்திருக்கலாம் தான்…
இப்போதும் அதே நேசத்தோடு
நெஞ்சங்கள் பதைக்கின்றன
இருவருக்கும்…
இணைந்திருந்தால் மட்டுமல்ல
நினைத்திருந்தாலும்
காதலில் வெற்றி தான்.

இணையத்தில் வாசித்த கவிதை


சாப்பிட்டேன் என
அம்மாவிடமும்
கவலைப்பட வில்லை என
அப்பாவிடமும்
அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன் என
அண்ணனிடமும்
முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது…
காலையிலிருந்து சாப்பிடல
ரொம்ப பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது….