Sunday, September 4, 2011

ரப்பருக்காய்...


நேற்றுவரை நீங்கள் தந்த இளநீரை
தான் நான் சுவைத்தேன்...

எங்கள் வீட்டு சமையலறையில் உங்கள்
தேங்காய்கள் உடைந்ததால்தான்
சமையல்கள் ருசித்தன...

உங்களது சில்லாட்டைகள், மட்டைகள்
எங்கள் வீட்டு அடுப்பில்தான் எரிந்தன...

உங்களது காவோலைகள் எங்கள்
மாட்டு தொழுவத்தின்
கூரையை வேய்ந்தன...

உங்களது இளந்தளிர் ஓலைகள்
எங்கள் ஊர் கோயிலில்
தோரணமாய் தொங்கின...
மாதா கோவிலில்
குருத்தோலை ஊர்வலமாக போனது...

எங்கள் ஊர் மாடனுக்கு சாமியாட
மாடப்பனுக்கு உங்களது பூவை
பிளிர்ந்து தந்தீர்கள்...

இத்தனை இருந்தும்
இன்று உங்கள் மூட்டில்
கோடாலி வைத்து விட்டேன்.
நாளை ரப்பர் தைகள் நட...

என்றாவது ஒருநாள்
சாலையோர இளநீர் கடையில்
வாடிப்போன சுவையற்ற
இளநீரைக் குடிக்கும்போது
உங்களது இளநீரின் சுவை
எனது நினைவை கிளறலாம்...

No comments:

Post a Comment