Wednesday, April 20, 2011

வேற்று கிரக மனிதன்(Alien)

   ரஷியாவின் சைபீரிய பனி பிரதேசத்தில் வேற்று கிரக மனிதனின்(Alien) பிணம் கண்டுபிடிக்கப்பட்டதாக இணைய தளங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது குறித்த ஒரு வீடியோ காட்சி கூட வெளியிடப்பட்டுள்ளது.
வேற்று கிரக மனிதனின் பிணம் Dead Body of an alien

இதன் மூலம் பூமியில் உள்ள மனிதனை விட அதிக தொழில்நுட்பமும் அறிவும் உடைய வேற்று கிரக வாசிகள் இருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கருத்தாக்கங்கள் (Postulates) நிரூபிக்கப்படலாம்.

Saturday, April 16, 2011

ஐடி வேலை


குறிப்பு:  புதிய பொருளாதாரக் கொள்கையை உலக நாடுகள் பரவலாக பின்பற்றிய காரணத்தால் ஏற்பட்ட உலக பொருளாதர நெருக்கடி காரணமாக ஐடி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்ட கால கட்டத்தில் எழுதப்பட்டது.

First Published : 01 Feb 2009 03:37:00 PM IST தினமணிக்கதிர்

இந்த பாத்ரூமுல மட்டும் இவ்வளவு வேகமா எங்கிருந்துதான் அழுக்கு வந்து ஒட்டிக்குதோ. கழுவி ஒரு வாரத்தில் மீண்டும் முழு அளவில் அழுக்காகி விட்டது. சிறு புழுக்கள் வேற நெளியுது. தண்ணீர் ஊற்றி விட்டா போயிடுது. அடுத்தத் தடவை வரும்போது சாம்பலில் உதிக்கும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் நெளியுது.
இன்றைக்கு எப்படியும் கழுவி விட வேண்டும்... என மனதுக்குள் எண்ணியவாறு வெளியே வந்தபோது எனது மனைவி சுபி என்கிற சுப்பிரியா வேலைக்கு போக தயாராகி இருந்தாள். என்னைப் பார்த்தவுடன் இன்றைக்கும் வேலைக்கு போகல தானே?....  நான் காலை ஆபிஸ் போகும் களோபரம் எதுவும் இல்லாமல் நிதானமாக இருப்பதைக் கண்டு மிகச் சரியாக கணித்துக் கொண்டே கேட்டாள்.
போகவில்லை என்பதாய் தலையை மட்டும் ஆட்டினேன். பதில் எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போனாள். டைனிங் டேபிளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி நான்கு இட்லிகளால் நிரப்பி சாம்பார் ஊற்றி தட்டை காலி செய்து வயிற்றை நிரப்பினேன்.
தண்ணீருக்கு பதிலாக மூடி வைக்கப்பட்டிருந்த ஆறிப்போன டீயை குடித்துக் கொண்டே டிவியை ஆன் செய்தேன். ஏதோ அறுவை நெடுந்தொடருக்கு விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்திவிட்டு நாற்காலியில் கிடந்த செய்தித்தாளை புரட்டினேன்.
பொருளாதார நெருக்கடி இந்தியாவை திரும்பிக்கூட பார்க்காது என்ற நிதியமைச்சரின் அறிவிப்புக்கு கீழே பங்குசந்தையின் தடாலடி வீழ்ச்சி பற்றி கால் பக்கச் செய்தி. அதனுள்ளே கட்டம் கட்டி நிதி நெருக்கடி காரணமாக தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அறிவிப்பு. திறமையற்றோர், இலக்கை எட்டாதோரை வெளியேற்ற ஐடி நிறுவனங்கள் திட்டமிடுவதாக பிரபல நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியதாக ஊகச் செய்தி கூடவே இருந்தது.
திறமையில்லாதவர்களை எந்த நிறுவனம் என்றைக்கு வேலைக்கு சேர்த்தது. காம்பஸ் இன்டர்வியூ நாலு கட்டமா நடத்தி தேர்வு செய்து இரண்டு மூன்று வருடம் அலையவிட்டு மீண்டும் இன்டர்வியூ நடத்திதானே தேர்வு செய்தார்கள். தற்போது திடீரென திறமையற்றோர் ஆனது எப்படி எனத் தெரியவில்லை.
செய்தித்தாளை நாற்காலியில் வீசிவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாமென எண்ணிக் கொண்டே ஒன்னுக்கு போக டாய்லெட்டுக்கு போனால் அங்கேயும் அழுக்கு பிரச்சனை. ஒன்னுக்கு போய்விட்டு தண்ணீர் ஊற்றி பிரஷை எடுத்து தரையை தேய்த்தேன். பிரஷால் தொடுமுன் அழுக்கை மாயமாய் மறைப்பதாக விளம்பரப் படுத்தப்பட்ட கிளீனரை ஊற்றி தேய்த்து கழுவி முடித்தபோது வியர்வையில் மொத்த உடலும் நனைந்திருந்தது. கிளீனருடைய மணம் டாய்லெட் முழுவதும் நிரம்பி இருந்தது. அதே கையோடு பாத்ரூமையும் கழுவி விட்டேன்.
சுபிக்கு இந்த பணி என்றால் அப்படியொரு அலர்ஜி. கல்யாணமானதிலிருந்து ஏதாவது கூறி என்னை கழுவ வைத்து விடுவாள். அப்போது கழுவி முடித்த பின்பு இப்படி பளிச்சென்று கழுவ உங்களால்தான் முடியும் என பாராட்டுவாள். இப்போதெல்லாம் இன்றைக்காவது தோணிச்சே என்பதோடு சரி.
மணி பதினொன்று ஆகி இருந்தது. இன்றைக்கு முடிவெடுக்கும் நாள். முடிவு இதுவாகத்தான் இருக்குமென்று தெளிவாக தெரிந்த பின்பும் தெரிந்து கொள்ள ஆவல். செல்போணை எடுத்து ஆன்ரூவுக்கு போண் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என பதில் வந்தது. டியுட்டில இருப்பான். காண்டாக்ட் பிளீஸ் என ஒரு குறுந்தகலை டைப் செய்து அனுப்பி வைத்தேன்.
பதிலுக்கு காத்திருந்து உறங்கிப் போனேன். திரும்ப போண் கூப்பிட்டபோது விழித்துக் கொண்டேன். மணி ஒன்றாகி இருந்தது. அவன்தான். சாப்பாட்டு இடைவேளையில் கூப்பிட்டிருக்கிறான். எடுத்து ஹலோ சொல்லுமுன் சாரிடா, லிஸ்ட் கன்பார்ம் பண்ணிட்டாங்க… என்றான். தொடர்பை துண்டித்தேன்.
பாத்திரிகையில் செய்தி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு பணிகள் தொடங்கப்பட்டிருந்தது. இருக்கக்கூடிய 1836 பேரில் சரிபாதியையாவது தூக்கினால்தான் தாக்குபிடிக்க முடியும் என்றார்கள். டீமை குறைக்கவா, டீமிலுள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதா என்பது முதல் விவாதமாக இருந்தது. டீம் எண்ணிக்கையை அப்படியே வைத்து ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி எந்தவித சத்தமுமில்லாமல் எங்களது நிறுவனத்தை தொட்டபோது ஐடி பிஈ… நாற்பதாயிரம் சம்பளம்… உள்நாட்டிலே வேலை… என்றபோது எழுந்து நின்ற காலர் தானாக கீழே இறங்குவதாகத் தோன்றியது.
டேய் உனது ஒரு மாதச் சம்பளத்துக்கு நான் ஒரு வருடம் உழைச்சாலும் முடியாது என அப்பா கூறியது ஞாபகத்துக்கு வந்தது. கேம்பஸ் இன்டர்வியூல தேர்வானவுடன் எனக்கு தனி மரியாதை. எல்லோரும் மகிழ்தார்கள். இதெல்லாம் ஒரு மாயைதான். ஐந்தாறு வருடத்துல உங்களை பிழிந்தெடுத்துவிட்டு சக்கையாக துப்பப் போறான் பாரு எனக்கூறிய கம்யூனிஸ்ட் மாமா எங்கள் அனைவருக்கும் அன்று கோமாளியானார்.
(இந்த பகுதி மூலக்கதையில் இருந்ததது. ஆனால் தினமணிக்கதிரில் வெளியாக வில்லை)
டெவலப்மெண்ட்னு சொன்னாலே இந்த கம்யூனிஸ்ட்களுக்கு வேப்பெண்ணை தான். என்றைக்குதான் திருந்த போறியோ. படுக்க கட்டில கொடுத்துட்டு ஆணி வைச்சி குத்துறத முதல்ல நிறுத்துங்க. நாடு முன்னேறட்டும். பேப்பரை பாத்தியா? வளர்ச்சி பத்தை தாண்டும்னு போட்டிருக்கான். சீனாவை தாண்டி போயிடுவோம். பொழைக்கிற வழிய பாருங்க… என சித்தப்பா சொன்னபோது அம்மா தம்பிக்காரனை பரிதாபமாக பார்த்தாள்.
வழக்கமாக புள்ளி விவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் என ஆணித்தரமாக வாதாடும் மாமா இப்போது வாயடைத்து நின்றார். எனக்கு கிடைத்த வேலை அவரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஏதோ வேலை இருப்பதாகக் கூறி கிளம்பிச் சென்று விட்டார்.
(இந்த பகுதி மூலக்கதையில் இருந்ததது. ஆனால் தினமணிக்கதிரில் வெளியாக வில்லை)
மாமா சொன்னது உண்மைதான் என இப்போது தோன்றியது. ராக்கெட்டுக்கு சாப்ட்வேர் எழுத போறோம்னு நினைச்சு தான் வேலைக்கு சேர்ந்தேன். அங்க போனா பெட்டிக்கடையில் பெப்சி விக்கிற கணக்கு போட, கோழிக் குஞ்சுக்கு சரியான நேரத்துக்கு தண்ணீர் விட, வயலுக்கு தண்ணீர் மோட்டார் போட, வீட்டு வாடையை முகர்ந்து கிளீனிங் அட்வைஸ் கொடுக்கன்னு எதுக்கெதுக்கோ புரோகிராம் எழுதியாச்சு.
இன்றைக்கு அவனெல்லாம் சாப்ட்வேர் வேண்டாமென்கிறான். அதனால நீங்களெல்லாம் வெளியே போங்கன்னு சொல்றான். வெளியேற்ற வேண்டியோர் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி எங்களது டீம் லீடர் கோகுலிடம் வந்தபோதே என் மனது உன் தலை தப்பாது எனக் கூறியது. அவனை பலமுறை முறைத்தாயிற்று. என்ன பொருத்தமோ எனக்கும் அவனுக்கும்? என் வேலையில் குறை கண்டே அவன் நக்கீரனாகிக் கொண்டிருந்தான். விட்டு வைப்பானா என்ன?
ஒரு வாரத்தில் லிஸ்ட் தயாராகி நோட்டீஸ் போர்டுக்கு வந்தது. சரிபாதி எனக் கூறியவர்கள் 900 பேரை மட்டுமே பட்டியலில் சேர்த்திருந்தனர். 18 பேரை பாவம் என விடுவித்திருந்தார்களோ என்னவோ. அகர வரிசைப்படி தேடி சுந்தரேசன் என்ற எனது பெயரை கண்டுபிடித்தேன். பெயரை கண்டுபிடித்த பலர் இடிந்து போயிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் துளிகள் திரண்டு பார்வையை மறைத்தது. ஓவென யாருமே அழவில்லை. இது ஐடி பண்பாடு போல…
பட்டியலின் கீழே ஒரு குறிப்பு இருந்தது. ஆட்சேபனைகளை மூன்று நாட்களுக்குள் ஹெச் ஆர் ஓக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எல்லோரும் அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தனர். தங்கை திருமணம், படித்த கடன், விவசாய நிலத்தை படிப்புக்காக இழந்த வரலாறு என தங்களால் முடிந்த அனைத்தையும் கொட்டி எழுதி தள்ளினர். கம்பியூட்டருக்கு இது எல்லாம் புரியாது எனத் தெரிந்தும் எழுதியிருந்தார்கள். நானும் இன்னும் சிலரும் வெறுமனே கோரிக்கையோடு நிறுத்தியிருந்தோம்.
ஏழு நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின் இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றேன். பிறகு மனது ஒத்துக் கொள்ளவில்லை. ஐந்து நாட்களாக வீட்டில் தூக்கமும் சாப்பாடுமாகக் கழிந்து விட்டிருந்தது.
இனிதான் மனைவியிடம் சொல்ல வேண்டும். வேலை குறைவானதால் தற்காலிக விடுப்புகள் எனத்தான் மனைவியிடம் சொல்லியிருந்தேன். அவள் ஒரு சிறிய நிறுவனத்தில் ரிசப்சனிஸ்ட் கம் கிளர்க். நாலாயிரத்து ஐநூறு தான் சம்பளம். எனது நாற்பதாயிரம் சம்பளத்திற்கு அருகில் வராதுதான். பொழுதும் போகும்... எனது செலவுக்கும் ஆச்சு… என அவள் கெஞ்சியபோது மறுக்கவில்லை.
வங்கி கணக்கை லேப் டாப் மூலம் ஆன்லைனில் சோதித்தபோது சரியாக ஒரு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து பதினெட்டு ரூபாய் நாற்பத்தெட்டு காசு என தெரிவித்தது. ஏழு வருட சம்பாத்தியத்தில் படித்த கடன் மீட்டியதுபோக இதுதான் மிச்சமா? என மனதில் கேள்வி எழுந்து அடங்கியது. நண்பன் வற்புறுத்தலில் சில மாதங்களுக்கு முன்னால் பங்கு சந்தையில் முதலீடு செய்த இரண்டு லட்சம் ஞாபகம் வந்தது.
நல்ல தென்னந்தோப்பு… வாங்கி போடுப்பா… நிலம் ஏமாத்தாது… தேவைப்பட்டா வீடு கூட கட்டிக்கலாம்… போக்குவரத்துக்கு வசதியான இடம்… என அப்பா கூறியது எல்லாம் இதே போக்கில் போனால் அடுத்த வருடம் டவுணில் நல்ல ஒரு பிளாட் வாங்கலாம்… என்ற நண்பனின் பேச்சு வென்றது.
அவனை தொடர்பு கொண்டு எவ்வளவு மிஞ்சும் எனக் கேட்டபோது சாரிடா… நம்பிய உன்னையும் ஏமாற்றி விட்டேனே… எனத் தொடங்கும் முன் அவன் நா தழுதழுத்தது. தொடர்பை துண்டித்தேன். இந்த ஏழு வருட ஐடி இன்ஞ்சினியர் வாழ்க்கையில் மிஞ்சியது எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக குறைந்த வருமானத்தோடு கிடைத்த மனைவி மட்டும் தான்.
அதுவும் முழுசா ஒரு வருடம் முடியல. மாதம் ஏழாயிரம் வாடகை வீடு. காலி செய்து சிறிய வீடு பார்க்கலாமா? ஊருக்கு திரும்பச் சென்று விடலாமா? சே வேண்டம். சுபியின் வேலையையும் விட வேண்டி வருமே. மனம் குழம்பி தவித்தது. கம்யூனிஸ்ட் மாமா ஒரு கணம் கண்முன் தோன்றி மறைந்தார்.



Friday, April 15, 2011

மனுஷ்ய நாடகம்

"வில்லியம் ஸரோயன்" எழுதிய மனுஷ்ய நாடகம் என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் படிக்கக் கிடைத்தது.
தமிழில் இதனை க. நா. சுப்ரமண்யம் மொழி பெயர்த்துள்ளார்.
ஒரு போர்.......
ஒரு குடும்பத்தின் ஒரு அங்கம் மார்க்கஸ் போர் முனையில்......
போர் வீரனை எதிர்பார்த்து இதாகா என்ற ஊரில்......
தாய் கேட்டி மெக்காலே, தங்கை பெஸ், தம்பி உலிஸிஸ்....
இவர்களை எல்லாம் காக்கும் பொறுப்பில் 14 வயதே ஆன ஹோமர் மெக்காலே....
ஹோமர் படித்துக்கொண்டே தந்தி ஆபீஸில் மாலையில் வேலை....
போர் முனை சாவு செய்திகளை சுமந்து வரும் தந்திகளை விநியோகிக்கிறார்.....
ஒரு நாள் தந்தியடிக்கும் க்ரோகன் என்ற கிழவர் டைப் செய்த தந்தியில் மார்க்கஸின் சாவு செய்தி....
அது தான் அவர் பெற்ற கடைசி தந்தி....
தந்தியை முழுவதும் எழுதி முடிக்காமலே இறக்கிறார்.....
குடும்பத்துக்கு எப்படி சொல்வது என தவிக்கும் ஹோமர்....
போர் முனையிலிருந்து காயத்தோடு மெக்காலே வீட்டுக்கு வந்து சேரும் ஆதரவற்ற போர் வீரன் டோபி ஜார்ஜ்....
நண்பனின் பிரிவால் வாடும் குடும்பத்தோடு இணைந்து விடுதல்....

-என ஒரு போரின் விளைவு ஒரு சிறு குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை அழகாக படம் பிடிக்கிறது இந்த நாவல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

2011 சட்டசபை தேர்தல் குமரி மாவட்ட வாக்குபதிவு விவரம்

2011 சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு தொகுதிகளிலும் வாக்களித்தோர் விவரம்



வ. எண்
தொகுதியின் பெயர்
வாக்களித்தோர் எண்ணிக்கை
ஆண்
பெண்
மொத்தம்
1
கன்னியாகுமரி(229)
       88,777
       90,641
    1,79,418
2
நாகர்கோவில(230)
       73,527
       72,838
    1,46,365
3
குளச்சல்(231)
       68,278
       76,542
    1,44,820
4
பத்மநாபபுரம்(232)
       69,869
       73,990
    1,43,859
5
விளவங்கோடு(233)
       72,894
       70,505
    1,43,399
6
கிள்ளியூர்(234)
       63,173
       72,587
    1,35,760

மொத்தம்
 4,36,518
 4,57,103
 8,93,621


வ. எண்
தொகுதியின் பெயர்
வக்களித்தோர் சதவீதம்
ஆண்
பெண்
மொத்தம்
1
கன்னியாகுமரி(229)
73.74
77.44
75.57
2
நாகர்கோவில(230)
69.76
69.93
69.84
3
குளச்சல்(231)
58.93
69.60
94.13
4
பத்மநாபபுரம்(232)
66.65
73.46
69.98
5
விளவங்கோடு(233)
70.39
68.73
69.56
6
கிள்ளியூர்(234)
58.52
69.84
64.07

மொத்தம்
66.34
71.60
68.93


குமரி மாவட்டத்தில் வாக்களித்தோரில் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த மாற்றம் தொடர்ந்து நல்லாட்சி மாநிலத்தில் மலரட்டும்.
தமிழ்நாடு அளவிலான விவரங்களை பெற..

Monday, April 11, 2011

கட்டணம்


ம. மிக்கேல் ராஜ்
First Published : 14 Nov 2010 03:37:00 PM IST தினமணிக்கதிர்



நண்பகல் இரண்டு மணி. மண்டையைப் பிளக்கிற வெயில். சைக்கிளை மிதிக்கும் ரஹீம் கால்களில் அனல் வாரி கொட்டுவது போன்று வெயிலின் உக்கிரம் தகிக்கிறது. சோர்வாக காணப்பட்ட அவனது கால்கள் மெதுவாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தன. மங்கிய கண்களில் சாலையின் கானல் நீர் கொதித்து மறிக்கிறது. தலை முதல் கால் வரை வழிந்தோடிய வியர்வைத் துளிகள் அவனது அவஸ்தையை மேலும் அதிகமாக்கி கொண்டிருந்தது.
சைக்கிள் கேரியரில் இருந்த பழைய டிரங்கு பெட்டியில் துருப்பிடித்த பழைய சைக்கிள் பாகங்கள், ஓட்டை பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் என ஆக்கர் பொருட்கள் நிரம்பி கிடந்தன. இரு பக்கமும் தொங்கிக் கொண்டிருந்த கோணிப்பைகளில் ஒன்றில் கிழிந்த தாள்களும் மற்றொன்றில் கண்ணாடி குப்பிகளுமாக நிரம்பி வழிந்தன. இன்றைக்கு வழக்கத்தைவிட கூடுதலாகவே ஆக்கர் பொருட்கள் வாங்கி இருந்தான். காலையில் கடை முதலாளியிடம் வாங்கிய முன்பணம் ஐநூறு போக முந்நூறு ரூபாயாவது மீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
இன்றைக்கு வட்டிக்காரனிடமிருந்து ரூபாய் வாங்கிவிட வேண்டும். ரிஷ்வானின் பள்ளியில் பணம் கட்டச் சொல்லி ஒருவாரம் ஆகிவிட்டது. நேற்று இரவு எழுத நோட்டு கிடைக்கவில்லை எனப் பழைய நோட்டுகளிலிருந்து எழுதப்படாத பேப்பர்களைக் கிழித்து எடுத்துக் கட்டிக்கொண்டிருந்தான்... என்று மனதுக்குள் எண்ணியவாறு சைக்கிள் ஹேண்டிலில் சுற்றியிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தான்.
ரிஷ்வான் ரஹீமின் மூத்த மகன். பக்கத்து டவுனிலுள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறான். குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் பருவம் வந்தபோது, பக்கத்து வீடுகளில் உள்ள பிள்ளைகள் டை கட்டி ஷூ போட்டு மிடுக்காக வேன்கள், பஸ்களில் ஏறி பள்ளிக்கூடம் செல்வதைக் கண்டபோது தனது பிள்ளையும் அது போல போக வேண்டும், படிக்க வேண்டும் என்ற மனைவியின் ஆசையோடு தனது பிள்ளை தன்னைப்போல கஷ்டப்படக் கூடாது என்ற ரஹீமின் எண்ணமும் சேர்ந்து கொண்டபோது ரிஷ்வான் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.
ரிஷ்வான் நன்றாக படித்து வகுப்பில்  ஒன்றாவது, இரண்டாவது என ரேங்க் வாங்கியபோது மகிழ்ச்சி அதிகமானது. எப்பாடுபட்டாவது மகனைப் படிக்க வைத்து பெரிய வேலையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. ஆனால் நிதி நிலைமைதான் மிகவும் கஷ்டப்படுத்தியது. என்னதான் அன்றாடம் உழைத்தாலும் கடனுக்கு மேல் கடன் வாங்கிதான் நாட்களை கழிக்க முடிந்தது.
ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் நாட்களில் வட்டிக்காரனைத் தேடி அலைந்து வட்டிக்கு  ரூபாய் வாங்கும் போது அடுத்த தடவை வட்டிக்கு வாங்கக்கூடாது  என எண்ணிக் கொண்டுதான் வாங்கினான். ஆனால் அவனது எண்ணத்தையும் மீறி வட்டிக் கடன் அதிகரிக்கிறதே தவிர தீர்ந்தபாடில்லை. அன்றாடச்செலவுக்கே தனது தொழில் கைகொடுக்காதபோது அவ்வப்போது வரும் மருத்துவச் செலவு, குடும்பத்தில் வரும் திருமணம் போன்ற தேவைகளுக்கு வட்டிக்காரனை நம்பியே காலம் ஓடிக் கொண்டிருந்தது. வட்டிக்காரன் நிரந்தர எதிரியாகவும் பிரிக்க முடியாத நண்பனாகவும் மாறி ரஹீமை அலைக்கழித்துக் கொண்டிருந்தான்.
மகள்  ஆயிஷாவும் முதல் இரண்டு வருடம் அதே பள்ளியில்தான் படித்தாள். நன்றாகவே படித்து வந்தாலும் ஏதோ காரணம் கூறி அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டான். பையனை படிக்க வைக்கிறான். பெண்ணை கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல விட்டிருக்கான் என்ற உறவுக்காரர்களின் பேச்சுக்களுக்குக் காது கொடுக்கவில்லை. அதோடு ரிஷ்வானையும் பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
ஆனால் ரிஷ்வான் பத்தாம் வகுப்பில் 452 மார்க் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி பெற்றபோது எல்லாம் மாறிப்போனது. எல்லோரும் கொண்டாடினர். பள்ளிக்கூடத்தில் அனைவரும் பாராட்டினர். நான்கு மார்க் கூடுதல் வாங்கியிருந்தால் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கலாம் எனப் பலரும் கூறியபோது மகனை நினைத்து பூரிப்படைந்தான்.
ஆனால் எல்லாம் முடிந்து டிசி வாங்கச் சென்றபோது பள்ளிக்கூட முதல்வருக்குச் சற்று மனக்கலக்கம் உண்டானது. அதோடு அவர், ""நான் கரஸ்பாண்டன்ட்டுக்கிட்ட சொல்லி கொஞ்சம் பீஸுக் குறைக்கச் சொல்றேன்'' என்றார். அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தான்.
பள்ளிக்கூட  முதல்வர் எழுதிக் கொடுத்த துண்டு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கரஸ்பாண்டன்டை பார்க்க காத்திருந்தான். டையும் பூட்ஸýம் போட்ட புத்தகக் கம்பெனி  பிரதிநிதிகள் எல்லாம் பார்த்து சென்ற பிறகு ரஹீம் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டான். முதல்வர் கொடுத்த துண்டு சீட்டைக் கொடுத்தவுடன் மேலும் கீழும் பார்த்துவிட்டு ""ரிஷ்வான் அப்பாதானே?''
என்று மட்டும் சொல்லிக்கொண்டு போனை எடுத்துப் பேசினார். பின்னர் ""நான் பிரின்சிபாலிடம் சொல்லியிருக்கேன். பையனை நல்லா படிக்கச் சொல்லுங்க. பிளஸ் டூல முதல் மார்க் வாங்கணும்'' என்று கனிவோடு கூறினார்.
ஆபீஸில் வந்து பீஸ் கட்டபோனபோது 12 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். கரஸ்பாண்டன்ட்டை பார்த்ததாகக் கூறியபோது ""ஆமா, பிளஸ் ஒன்னுக்கு 12 ஆயிரத்து எண்ணூறு பீஸ் எண்ணூறு குறைச்சிருக்கில்ல'' என்றபோது கரஸ்பாண்டன்டின் கனிவான பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் மலையாய் உயர்ந்தது.
பீûஸக்  கடன் வாங்கி கட்டி முடித்தான். பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்த நிலையில் இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் எடுப்பதாகவும் அதற்குரிய நோட்டு புத்தகத்துக்கு இரண்டாயிரத்து நானூறு கட்ட வேண்டும் என்று கூறியபோது மீண்டும் வட்டிக்காரனைத் தேடினான் ரஹீம்.
நேற்று கிடைத்த நூற்று எண்பது ரூபாயையும் பழைய கடன் அடைக்க அவனுக்குத்தான் கொடுத்தான். அவனுக்கு மூன்று தவணை பாக்கி. அதைக் கொடுத்து முடித்தால்தான் அடுத்து பணம் தருவான். ஆனால் இன்று எப்படியாவது கையில் கிடைக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு மூவாயிரம் ரூபாய் வாங்கிவிட வேண்டும். மூவாயிரம் வாங்கினால்தான் ரிஷ்வானுக்கு பள்ளியில் கொடுக்க வேண்டிய இரண்டாயிரத்து நானூறு போக ஆயிஷாவுக்கு ஒரு செட் யூனிபார்ம் எடுக்கமுடியும். ஒரு செட் துணியை வைத்துக்கொண்டு தினமும் போட்டு வருவதால் அது சுருண்டு போய்க் கந்தலாகக் கிடக்கிறது. மீதி ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு நாளாவது நல்ல மீன் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்க ஆக்கர் கடைக்கு வந்து சேர்ந்தான்.
கடையில் முதலாளியில்லை. அவருடைய மச்சான்காரன்தான் இருந்தான். இவன் இப்ப ஆயிரம் குத்தஞ்சொல்லி உள்ளதையும் இல்லைன்னு சொல்லப் போறான் என வாயில் முணுமுணுத்துக் கொண்டே சைக்கிளை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான். ஒவ்வொரு சாக்குப்பையாக கீழே இறக்கி கைபார்த்து பொருட்களைத் தனித்தனியாக பிரிக்கத் தொடங்கினான்.
இதற்குள்ளாகக் கடைக்கு வந்த முதலாளி ""என்ன நேரத்தோடு வந்துட்ட? நல்ல கொய்த்தா?'' எனக் கேட்டுக் கொண்டே தராசுக்குப் பக்கத்தில் இருந்த, உடைந்து ஒட்டு போட்ட நாற்காலியில் உட்கார்ந்தார். தராசு தட்டிலிருந்து எடைக்கற்களை எடுத்து கீழே வைத்துவிட்டு தூசுகளை தட்டிவிட்டு எடைக்கற்களை மீண்டும் தராசு தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தார். மச்சான்காரன் எழுந்து வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போனான்.
யாரோ  ஒருவரை வண்டி இடித்துவிட்டதாக கூறிக்கொண்டுச் சென்றனர் மேற்கு தெரு பையன்கள். அவர்கள் பள்ளிக்கு போகாமல் கிரிக்கெட் மாட்ச் முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அதனை காற்றோட்டச் செய்தியாக கேட்ட ரஹிம் பொருட்களை கைபார்ப்பதில் கவனத்தை செலுத்தனார்.
பின்னர் சற்று நேரத்தில் அங்கு வந்த பக்கத்துக் கடை முதலாளி ""சாலி ஏதோ ஒரு பையன ஸ்கூல் பஸ் இடிச்சிச்சாம் உனக்கு தெரியுமா யாரு''ன்னு எனக் கேட்டுக் கொண்டே வந்தார். ""எப்பவாம்...'' என்ற கேள்விக்கு ""இப்பத்தான் சொல்றாங்க... வேற எதுவும் தெரியல. எனக்க மோன் சையது வீட்டிலதான் இருந்தான் போய்பாத்துவரச் சொல்லி அனுப்பினேன்'' என்று முடித்தார்.
அவர்களது  பேச்சு தொடர்ந்தது. ரஹீம்  ஆக்கரை பிரித்து தனித்தனி சாக்குகளில் வைத்து தராசு  தட்டில் வைக்க முதலாளி  எடை போட்டு பழைய பேப்பரில்  குறித்துக் கொண்டிருந்தார். எல்லா ஆக்கர் பொருட்களையும் எடைபோட்டு முடித்தபின்பு தனது பைகளை மடக்கி டிரங்கு பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த போது முதலாளி ""ரஹீமு இன்னக்கி உனக்கு கோளூதான். எண்ணூத்து நாப்பது ரூபாய் தேறியிருக்கு'' எனக் கூறியபோது சற்றே மகிழந்தான் ரஹிம்.
இன்றைக்கு வட்டிக்காரனிடம் முன்னூறு ரூபாய் கொடுத்து மூவாயிரம் ரூபாய் மீண்டும் வாங்கிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டே முதலாளி கொடுத்த  ரூபாயை வாங்கிக் கொண்டு சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து உருட்டத் தயாரானான். அப்போது சாலி கையிலிருந்த செல்போன் ஒலித்தது.
அவருடைய மகனிடமிருந்து வந்த அழைப்பில் சாலி பேசினார். ""லே யாருன்னு சொன்ன நம்ம ஆக்கர் ரஹீமின் மோனா...'' எனக் கேட்டுக் கொண்டே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார். எதிர் முனை குரல் தற்போது கேட்டது. ""ஏதோ பீஸ் கட்டலைன்னு ஸ்கூல்லண்டு வெளிய போகச் சொன்னாங்களாம்... இவன் வெளிய வந்தப்போ ஸ்கூல் பஸ்தான் இடிச்சிருக்கு. டயருக்கு அடியில தலை மாட்டிருக்கு. வண்டிய பின்னுக்கு தள்ளி இப்பத்தான் பிரேதத்த வெளிய எடுக்கிறாங்க. பிரேக் இல்லியோ என்னமோ பஸ் ஸ்கூல் காம்பவுண்டில இடிச்சி நிக்குது.''
இதனை கேட்ட ரஹிம் மூர்ச்சையாகி சாலையில் சாய்ந்தான். அவனது உழைப்பின் ஆதாரமான சைக்கிள் மறுபுறம் சரிந்தது.

தினமணிக்கதிர் கதிர் வீச்சு 28-11-2010

ம.மிக்கேல்ராஜ் எழுதிய 'கட்டணம்' சிறுகதை மிகுந்த ஆழமான சிந்தனையைத் தூண்டியது. மகனின் எதிர்கால வாழ்க்கைக்காக ரஹீம் கஷ்டப்பட்டு பணம் சேர்ததபோது மகனைப் பிரிய நேரிட்டது. ரஹீமின் மகன் ரிஷ்வான் மறைந்தான் எனினும் சிறுகதையை மறக்க முடியாது.

இரா.பாண்டியன், திருவண்ணாமலை.


தனியார் கல்வி நிறுவனங்கள்  'கட்டணம்' என்ற பெயரில் கல்வி பயிலும் மாணவர்களையும் பெற்றோரையும் படுத்தும பாடு, சிறுகதையில் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. கண்டனம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் திருந்தும் நாள் எந்நாள்?

டி.கே. மோகன், மதுரை - 14.

மீன் வியாபாரியின் மகன்


First Published : 11 Jul 2010   தினமணி கதிர்

           
இந்த வைகாசி மாசத்திலும் இந்த குளிரு எங்கண்டுதான் வருதோ.. மார்கழி மாச குளிரு போல ஊசியா எறங்குது. இந்த ஆட்டோக்காரன் கிட்ட சொன்னாக் கேக்யானா? இராத்திரியில ரோடு சும்மா கிடக்குதுன்னு வண்டில பறக்கத்தான் செய்யான்... பகல்ல வோட்டி தீக்க முடியாததெல்லாம் இப்போ வோட்டித் தீக்கறான் போல.. ' என மனதில் நினைத்தவாறு தளர்ந்திருந்த தலைப்பாகையை அவிழ்த்து காது மடலோடு சேர்த்து இறுகக் கட்டினார் எலியாஸ்.
இன்னமும் குளிர் குத்தூசியாய் குத்தத்தான் செய்தது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கழுத்துவரை மூடிக் கொண்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மீன் கூடை மீது உட்கார்ந்திருந்தவாறு வேறொரு கூடையில் தலை சாய்த்து உறங்க முயற்சித்தார்.
இப்படி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து சென்றால் தான் வியாபாரத்துக்கு மீன் கிடைக்கும். முன்பெல்லாம் அதிகாலை மூன்று மணிக்கே சைக்கிளில் சென்று மீன் எடுத்து வந்தனர். இப்போது அது முடிவதில்லை. எனவேதான் ஏழு, எட்டுப் பேர் கூட்டாக ஒரு லோடு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மீன் எடுக்கச் செல்கின்றனர்.
தன்னைப் போலவே தூங்க நினைத்து தூங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த வர்க்கீசோடு பேச்சு கொடுத்தார் எலியாஸ். "ஏல.. நேத்திக்கு நெத்தலி வெயாவரம் எப்படில.. நான் கொண்டு போயி வித்து முடிக்கிறதுக்கு அந்திக்கு 6 மணி வரைக்கும் சீவன மாட்ட வேண்டியதா போச்சு''
"என்ன செய்யண்ணே... நான் கொண்டு போனது பாதி விக்காம கருவாடுக்கு வெயில்ல போடச் சொன்னேன்'' என நேற்று வழக்கமாக மீன் விற்கும் பாறக்கடை மீன் கடையில் விற்றுத் தீர்க்க முடியாததால் மீதி மீனை சைக்கிளில் கட்டி தெருத் தெருவாக கொண்டு போய் விற்ற கதையைப் பேசிக் கொண்டனர்.
"கருவாடு போட்டாத்தான்.. எங்க கொண்டு விக்கிறதாம். நாம தான் திங்கணும். நாம மண்ணலயும் கல்லுலயும் போட்டு உலர்த்தினா எவன் வாங்குவான். கம்பெனிக்காரன் கரண்டுல உலர்த்தி பாக்கெட்டுல அடச்சு விக்கிறதுதானே சனங்களுக்குப் பிடிச்சுப் போய் கிடக்கு. மண்ணில்ல.. உப்பில்லண்ணுல்ல சொல்லி வாங்கிட்டு போகுதுக'' என எலியாஸ் சலித்துக் கொண்டார்.
"ம்ம்.. காலம் மாறுது இல்ல. நம்ம செறுப்ப காலத்தில என்னக்கி இப்படி வைகாசி மாசத்தில குளிரடிச்சுது... செறுப்பத்தில நம்ம ஐயா மாரு என்னக்காவது வண்டியில மீன்பாடு கொண்டு வந்தாவளா.. எல்லாந் தலச்சுமடு தானே'' என்றார் வர்க்கீஸ்.
சற்று நேர அமைதிக்குப் பின் எலியாஸ், "ஏல சுருட்டு வைச்சிருக்கியா... நான் நேத்து நாடார் கடையிலயிருந்து வாங்கின சுருட்டு நல்லாயில்ல... நான் வீட்டில போட்டிட்டு வந்தேன். இன்னக்கி கலிக்காவிள சந்தக் கடையிலண்டு ரண்டு பாக்கெட்டு சுருட்டு வாங்கணம். மறந்திடாத'' எனப் புகைப்பிடித்தால் குளிர் குறையும் என்ற எண்ணத்தோடு கூறினார்.
மடியில் இருந்த பொதியை எடுத்துப் பிரித்த வர்க்கீஸ் அதிலிருந்து இரண்டு சுருட்டுகளை எடுத்து ஒன்றை எலியாசிடம் நீட்டினான். சிகரெட் லைட்டரை எடுத்துச் சுருட்டை வாயில் வைத்துக் கொளுத்தினார். அப்படியே எலியாஸ் கொளுத்திக் கொள்ள சிகரெட்  லைட்டரை நீட்டினார்.
சுருட்டின் புகை உள்ளே சென்றதும் சிறிது குளிர் விட்டுப் போனது போல இருந்தது. எலியாஸ் சுருட்டின் புகையை ஊதிக் கொண்டே "ஏல... இன்னக்கி சனியாச்சயில்ல.. பாண்டிக்காரன் கலக்சனுக்கு வருவானில்ல.. 150 ரூவா அவனுக்குக் கொடுக்கணும். போன வாரம் கொடுக்கல வெயாவரம் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டேன். இந்த வாரம் வாங்காமப் போகமாட்டான்''.
"ஏன்ண்ணே வீட்டில கொடுக்கது எதுவும் மிஞ்சாதா.. என் வீட்ல பாண்டிக்காரன் கதையெல்லாம் நான் பாக்கறதே இல்லே. அவக்கத அது.. வீட்டில் பொம்பளை எதுக்கண்ணே? கொடுக்கத வைச்சிட்டு இதயெல்லாம் பாத்தாத்தானே நமக்கும் கொஞ்சம் ஆத்தலா இருக்கும்''
"என் வீட்டுக்காரிகிட்ட இதெல்லாம் பேச முடியாதுடா. எப்ப கேட்டாலும் பையனுக்கு ஸ்கூலுக்குக் கொடுத்தேன். பொண்ணுக்கு காலேசிக்கு கொடுத்தேன்னு ஏதாது சொல்லிட்டிருக்கா. என்ன படிக்குதுகளோ. எனக்கொண்ணும் பிடிச்சுக் காணல்ல.. நாம இந்தத் தொழில செஞ்சு என்னக்கில்ல இதுகள கரையேத்தறது. பொண்ண கெட்டிக் கொடுக்கலான்னு சொன்னா கேக்காயில்ல. படிச்சு முடிச்சுட்டா அதுக்குத் தக்கன மாப்பிள எங்க போயி தேடறதாம்? இவ கிட்ட சொன்னா புரியமாட்டேங்குது''
"சும்மாயிருண்ணே. தெராசாக்கா ரெண்டு பிள்ளைகள பெத்திருக்கு. எப்படி படிக்குது பாருங்கன்னு ஊருல்ல எல்லாரும் சொல்றதக் கேட்டா எனக்கே பூரிச்சுப் போகுது. நீங்க என்னடான்னா இப்படி சொல்ற. நம்ம கஷ்டம் நம்மோட போட்டண்ணே. நம்ம பிள்ளக இப்படிக் காத்தால குளிருல நடுங்கி அல்லாடப்படாதண்ணே'' எனக் கூறிக் கொண்டு கையிலிருந்த சுருட்டைக் கடைசியாக ஒருமுறை இழுத்துவிட்டு துண்டு சுருட்டை தூர எறிந்தான் வர்க்கீஸ்.
"என்னத்த பொழப்பு'' என எலியாஸ் பேசத் துவங்குகையில் வண்டி குடுகுடுவென குலுங்கத் தொடங்கியது. "லே நாசமா போற பயலே..மொள்ளமா போலே. ரோட்டில கண்ணில்லாமலா வண்டி ஓட்டுற. இப்படி போனன்னா களிக்காவிள போச்சில ஒனக்க டப்பா வண்டில நீ பிடிச்சிருக்க வளையம் மட்டும்தான் மிஞ்சும்..''
வண்டி குழித்துறை ஆற்றுப் பாலத்தினருகில் சென்ற போதுதான் இந்தக் களேபரம். முப்பது ஆண்டு கனவாக இருந்த குழித்துறை ஆற்றுப் பாலம் பல போராட்டங்களுக்குப் பின் எப்படியோ நல்லநிலையில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் இரண்டு பக்கமும் உள்ள இணைப்புச் சாலைதான் இந்தப் பாடுபடுத்துகிறது.
"லே...பாத்தியா குண்டு குழியாக, குழி குளமாகிறது. மழை பெஞ்சின்னா நாம மீன் வாங்க களிக்காவிளை போவண்டாம். இந்தக் குளத்தில மீன் பிடிச்சு விக்கலாம்.'' என எலியாஸ் கூறிக் கொண்டிருக்கும் இடைமறித்த வர்க்கீஸ் "ஆமாண்ணே.. இன்னக்கித்தானே பத்தாங் கிளாஸ் ரெசல்ட்டு... நேத்து ராத்திரி குருசரி செபத்தில எல்லாரும் நல்ல மார்க் வாங்கணன்னு செபம் செய்தாவ இல்ல'' என வினவினான்.
"ஆமாண்டா... நேத்து ராத்திரி என் வீட்லயும் இதுதான் செபம். பிள்ள நல்ல மார்க்கோட செயிக்கணும்... செயிக்கணும்னு ஒரே செபந்தான். தெரசா ரெசல்ட் வந்தவுடன பையன பதினொண்ணாங் கிளாசில சேக்கணும்னு சொல்றா... இந்தப் பயகிட்ட ஏதாவது தொழில் படிச்சுட்டு நாலு காசி பாக்கப்பாருன்னு சென்னா அவனும் கேக்க மாட்டான். கம்பியூட்டர படிப்பேன்னு ஒத்தக் காலுல நிக்கான்'' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆட்டோ சாலை ஓரமாக நின்றது.
எலியாஸ் எட்டிப் பார்த்தார். படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஆட்டோ நின்றிருந்தது. டார்ச் லைட்டோடு வந்த போலீஸ்கார், "எறங்கு... எறங்கு.. வண்டிய செக் பண்ணனும்'' எனக் கூறிக் கொண்டே வந்தார். வல்லேரியா கிழவியைத் தவிர எல்லாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.
வண்டியிலிருந்து இறங்காமல் இருந்த வல்லேரியா கிழவியை போலீஸ்காரர் லத்தியால் தட்டி இறங்கச் சொன்னார். கிழவி அவளோட அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். "பாத்திரத்தில என்ன?'' எனக் கேட்டுக் கொண்டே கிழவி தலைப்பாகைக்கு எனச் சுருட்டி வைத்திருந்த பழைய கிழிந்த துணியை எடுத்து உதறினார் போலீஸ்காரர். வண்டியிலிருந்து எல்லா பிளாஸ்டிக் கூடைகளையும் இறக்கிச் சோதித்து ஒன்றுமில்லாததைக் கண்டு ஆட்டோ ஓட்டுநரிடம் சென்று, "பேப்பரெல்லாம் எடு ...'' என லத்தியைச் சுழற்றினார்.
இதுவரை மௌனமாக இருந்த எலியாஸ் பேசத் தொடங்கினார். "ஏல.. இப்படி எல்லாம் செக் பண்ணாலும் லாரி லாரியா ரேசன் அரிசி கடத்துறவனுக கெட்டிக்காரனுவதான் இல்ல..'' என்றவுடன் போலீஸ்காரர் இவரைப் பார்த்து முறைத்தார். இதற்கிடையில் வேகமாக வந்த ஒரு டெம்போ சற்று வேகம் குறைய கிளீனர் வண்டியிலிருந்தே ஏதோ நீட்ட அதை வாங்கிய மற்றொரு போலீஸ்காரர் "ரெகுலர் பார்ட்டி அண்ணே.'' ஆட்டோ சோனையில் முனைப்பாக நின்ற போலீஸ்காரருக்குத் தகவல் சொன்னார்.
இதைக் கவனித்த எலியாஸ் "பாத்தியா ரேசனரிசி எப்படிப் போவுதுன்னு'' என்றார். வர்க்கீஸ் போலீஸ்காரரிடம் "ஏன் சார் இப்பவே நேரமாயிப் போச்சு... கேரள வண்டிக வந்து யேலம் முடிஞ்சிட்டா நல்ல மீன் கெடைக்காது'' என்றதைக் கேட்டும் கேட்காமல் போலீஸ்காரர் வண்டிக்கான ஆவணங்களில் ஒன்றையும் எடுக்காமல் நின்றிருந்த ஓட்டுநரிடம் திரும்பி "பேப்பர் ஒண்ணுமில்லையா? நூறு ரூவா கொடுத்துட்டுப் போ'' என வழிப்பறியில் ஈடுபடும் ரெüடி போல மிரட்டினார். ஓட்டுநர் கையைப் பிசைந்தபடி நின்றார்.
இதற்கிடையில் சோதனைச் சாவடிக்கு உள்ளேயிருந்து வெளியே வந்த உதவி ஆய்வாளர், "அதென்ன மீன் வண்டியா.. விட்டுத் தள்ளய்யா... எல்லாவனும் சேந்து ரோட்டில இருந்தாலும் இருந்திருவானுக'' என்றார் சலிப்போடு.
அப்பாடி... என பெருமூச்சு விட்டவாறு எல்லாரும் வண்டியில் ஏற வண்டி புறப்பட்டது. வண்டி களியக்காவிளை மீன் சந்தையை எட்டிய போது மணி ஐந்தரையாகியிருந்தது. ஏலம் முடிந்திருந்தது. இனி ஏலம் பிடித்து வைத்திருப்பவரிடம் விலைக்குத்தான் வாங்க வேண்டும். அதுவும் நல்ல மீன் கிடைக்காது. நெத்தலி, சாளை, சூரை மீன்கள் இருந்தன. சூரையும் பெரிய சூரையாயில்லை. "இதுகளை வெட்டி வித்து காசாக்குவது பெரும் செரமம்தான்' என மனதுக்குள் எண்ணிய எலியாஸ் சாளை மீனை வாங்கினார். வர்க்கீசு நெத்திலி வாங்கினார். வண்டியில் இவர்கள் கூட வந்தவர்கள் எல்லாரும் மீன் வாங்கி வண்டிக்குக் கொண்டு வந்து பாரம் ஏற்றிக் கொண்டிருந்தனர். வல்லேரியா கிழவிக்கு மற்றவர்கள் உதவி செய்தார்கள்.
இதற்குள் மணி ஆறாகி இருந்தது. கடைக்காரரிடம் மணி கேட்டுத் தெரிந்து கொண்டு, "ஏல இன்னக்கி நேரத்துக்கு மீன்கடைக்கு போவமுடியாது போலத்தான் தெரியுது. யாதுக்கும் ஒரு சாய குடிக்கலாம் வா'' எனக் கூறிக் கொண்டு டீக்கடைக்குச் சென்றார். பக்கத்துப் பெட்டிக் கடையில் மறக்காமல் சுருட்டு வாங்கிக் கொண்டார். வண்டி பாரம் ஏற்றி முடித்தவுடன் மீதமுள்ளவர்களும் டீ குடித்துக் கிளம்பினர்.
வண்டி கிளம்பி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மீன் கடையில் இறக்கிவிட்டுச் சென்றது. கடைசியில் எலியாஸும் வர்க்கீசும் பாறக்கடை மீன்கடையில் இறங்கிக் கொண்டனர். " கையில பைசாயிருந்த இருபது ரூவா தா... காலைல காப்பி குடிக்கக் கூட கையில காசில்ல..'' எனக் கேட்டு வாங்கிக் கொண்டு ஆட்டோக்காரர் சென்றார். இவர்கள் மீன் விற்று மாலையில்தான் வாடகை கொடுக்க வேண்டும்.
மீன் கடையில் வழக்கமாக எலியாஸ் இருந்து மீன் விற்கும் கல்லில் யாரோ மண் வாரி போட்டிருந்தார்கள். பக்கத்தில் போய்ப் பார்தத போது குடலைப் புரட்டும் நாற்றம். அருகில் மது பாட்டில். ஹோட்டலிலிருந்து வாங்கப்பட்ட புரோட்டா பார்சலின் மிச்ச மீதிகள் சிதறிக் கிடந்தன. நேற்று யாரோ இந்த இடத்தை திறந்தவெளி பாராக மாற்றியிருந்தார்கள். அவர்களின் வாந்திதான் இந்தக் குடலைப் புரட்டும் நாற்றம்.
பெரும்பாலும் இதுவரை குடித்துப் பழக்கமில்லாத கல்லூரி அல்லது பள்ளிக்கூடப் பையன்களாகயிருக்கும் என்பதை எலியாஸால் யூகிக்க முடிந்தது. " குடிக்க கழிவிலன்ன என்ன மயிருக்கு குடிக்கானுவ... இதுக எல்லாம் படிக்கேன்னு சொல்லி தள்ளமாருக்க தாலியறுக்க விடாதுக..'' எனத் திட்டிக் கொண்டே வர்க்கீசைக் கூப்பிட்டு மீனை வேறொரு கல்லுக்கு மாற்றினார்.
மீன் கடை கூடி மீன் விற்பனை துவங்கியது. "வா.. வா.. பத்து ரூவாக்கு எட்டு.. எட்டு'', "அங்க என்ன பாக்கிய... நல்லத கொண்டு போ...'', "வா... வா... கூறு பத்து ரூவா...'', " அழுவுன மீனா வாங்க வந்த.. அவங்கிட்ட போற''... " ஏ... தம்பி வா... வா... பச்சக் கிளியில்ல கொண்டு வந்திருக்கேன்'' எனக் குரல்கள் மீன் கடையின் பலமுனைகளிலிருந்தும் எதிரொலிக்கத் துவங்கியது.
மீன் வாங்க வந்தவர்கள் பலரும் அன்றைய பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பற்றியே பேசினார்கள். "லே நீயா?... ஒன் தம்பியா... பத்து படிக்கியது? பாஸாச்சல? '', "ஒன் பேரன் பத்து தானே ரிசல்ட் பாத்தாச்சா?'', "இப்ப கம்பியூட்டல்ல இல்ல பாக்கணுமாம்.. லே சாலினு நீ ரிசல்ட் பாக்க போனா எனக்க பயலுக்கும் பாத்துட்டு வா... பய பயந்துட்டு கேரளத்திலண்டு வரச் சொன்ன பொறவும் வரல'' என்பன போன்ற பேச்சுகள் மீன் கடையிலும் எதிரொலித்தது.
எலியாஸ் தனது பையன் பாஸாயிடுவான் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். அவருடைய மகன் ரெஜின் நன்றாகப் படிக்கக் கூடியவன்தான். ஊரில் உள்ள எல்லாரும் எலியாஸின் பிள்ளைகளை படிப்புக்கு உதாரணமாகக் கூறுவர். எனவே, தேர்வில் வெற்றி பெற்றுவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. மதிப்பெண்களைப் பற்றியோ அதனுடைய அருமை பற்றியோ அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதுபற்றி அவர் அக்கறை கொள்ளவுமில்லை.
நேரம் பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மீன் கடைக்கு அருகிலிருந்த வீட்டுப் பையன் பள்ளிக்கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறி எல்லாருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுத்தான். எலியாஸýக்கும் கிடைத்தது. இடது கை கொண்டு வாங்கி மீன் எச்சில் படாமல் வைப்பதாக நினைத்து மீன் செதில்களால் நிறைந்திருந்த ரூபாய் நோட்டுகளுடன் போட்டார். இன்னும் மீதமிருக்கும் மீனை 50 ரூபாய்க்கு விற்கலாம்.
மிட்டாய் கொடுத்த பையன் 20 ரூபாய்க்கு மீன் கேட்டான். எல்லா மீனையும் அவனுக்குக் கொடுத்தார். பையன் "இவ்வளவு மீனா?'' என அதிசயித்து வாங்கிப் போனான். ஏற்கனவே
மீன் விற்று முடித்துப் புறப்படத் தயாராயிருந்த வர்க்கீசோடு வேக வேகமாகக் கிளம்பினார். வயிற்றுப் பசி கண்ணைக் கிறக்கியது. கலையில் குடித்த டீக்கு பிறகு மீன் விற்று விற்று நான்கு டீ குடித்துவிட்டார். இனி வீட்டில் போய் சோறு சாப்பிட்டால்தான் பசியடங்கும்.
பேருந்தைப் பிடித்து இருவரும் ஊர் வந்து சேர்ந்தனர். அதிகாலையில் நாடார் கடையில் வைத்த சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கம்போல டாஸ்மாக் கடை நோக்கி சைக்கிளைச் செலுத்தினர்.
"அண்ணே இன்னக்கி வேண்டான்னே.. ரிசன் பாஸாயிருப்பானில்ல... அவனுக்கு மிட்டாய் வாங்கிட்டுப் போ... மீன் கடையில அந்தப்பையன் மிட்டாய் கொடுத்ததுபோல எல்லாருக்கும் கொடுக்கலாம்...'' என்ற வர்க்கீசின் பேச்சுக்குத் தலையாட்டி மிட்டாய் வாங்க நாடார் கடைக்குச் சைக்கிளைத் திருப்பினார். கடைக்காரர் பொருள் வாங்க வந்த பையனிடம், ஸ்டேட் பஸ்ட் நம்ம மணலிக்கரை பள்ளியாமே.. ஏது பையாம்பில அது'' என வினவ, "என் கிளாசில படிச்ச பையன்தான். ரெஜின்னு பேரு. ஆர்.சி.தெருவிலண்டு. ஒரு மீன் வெயாபாரி பையன்'' என்று மனப்பாடம் செய்யுள் ஒப்புவிப்பதுபோலச் சொன்னான்.
சைக்கிளை நிறுத்தப் போன எலியாஸ் இதனைக் கேட்டவுடன், "யாருக்குன்னு சொன்ன'' என  வினவினார். திரும்பிப் பார்த்த பையன் இவரை அடையாளம் கண்டு கொண்டு, "உங்க பையன் ரெஜினுக்குத்தான் ஸ்டேட் பஸ்ட்... எல்லாரும் வந்து போட்டோ எடுத்திக்கிட்டு இருக்காங்க. உங்களைத்தான் காணலன்னு தேடிக்கிட்டு இருக்காங்க'' என்றான்.
"லே... ஒன் பையனா...ல்லே?'' எனக் கடைக்காரர் கேட்டது கூடக் காதில் விழாமல், மிட்டாய் வாங்கவும் தோன்றாமல் சந்தோஷம் தாங்காமல் மகனைப் பார்க்க சைக்கிளில் பறந்தார் எலியாஸ்






விமர்சனங்கள்

தினமணி கதிர் தேதி 25-07-2010

மீன் வியாபாரியின்  மகன் சிறுகதையைப் படுத்தபோது கண்களிலிருந்து இருவகையான கண்ணீர். மீனவர்களின் தொழிலில்படும் துயரங்களைப் படித்து முதலில் வடிந்தது துயரக் கண்ணீர். அந்த மீன் வியாபாரியின் மகன் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றதை எண்ணி கதையின் முடிவில் கண்கள் சிந்தியது ஆனந்தக் கண்ணீர்.

செ.சத்தியசீலன்,
கிழவன் ஏரி.

தினமணி கதிர் தேதி 25-07-2010
ஒரு தலைமுறை வீழந்து கிடந்தாலும் அடுத்த தலைமுறை கல்வியின் துணைகொண்டு எழுந்து நிற்க முடியும் என்பதை மீன் வியாபாரியின் மகன் சிறுகதை சிறப்பாக எடுத்துக் காட்டியது.

மா.பிரபாகரன்,
மதுரை.